234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் – சசிகலா அதிரடி முடிவு

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சரியான வியூகம் அமைக்க வேண்டும் என்று சசிகலா தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

அதற்கு,முதல்கட்டமாக அதிமுக ஒருங்கிணைந்து வலிமை பெறவேண்டும் என்பது அவருடைய கருத்து.அதற்காக, தனக்கு நேரிடையாகவே துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமியை மன்னித்து அவரே முதலமைச்சர் வேட்பாளராக இருக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும் என்பது அவருடைய எண்ணம்.

தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறுவடை செய்யவேண்டுமானால் எதிர்க்கட்சி வலிமையாக இருக்கவேண்டும்.

அதிமுக பல பிரிவுகளாகப் பிரிந்திருப்பதால் வலிமை குன்றியிருப்பதோடு அக்கட்சித் தொண்டர்களே அக்கட்சி மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.

இதனால் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் சசிகலா.

பேரறிஞர் அண்ணா நினைவுநாளிலும் அதையே வலியுறுத்திப் பேசினார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக நேற்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா விசயம் முடிந்துபோன விசயம்,திரும்பத் திரும்ப அதைப் பற்றிப் பேசாதீர்கள் என்று சொன்னார்.

இதனால், கோபமடைந்த சசிகலா, இதுவரை காட்டிய பொறுமையைக் கைவிட்டு ஓர் அதிரடி முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.அவர் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லமாட்டார்.தனிக்கட்சி தொடங்கவும் திட்டமில்லை.அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஓர் அறுவை சிகிச்சை செய்வோம் என முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என்றும் அவர்களுக்காகப் பரப்புரையில் ஈடுபடுவது எனத் திட்டமிட்டிருக்கிறாராம்.

இதனால் ஒன்றிய பாஜக அரசு அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுப்போம் என மிரட்டினாலும்,நடவடிக்கையே எடுத்தாலும், அதையும் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவர் அப்படிச் செய்துவிட்டால், அது அதிமுக பாஜக கூட்டணிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வெள்ளிடைமலை. இதனால் அந்தக் கூட்டணி அதிர்ச்சியில் இருப்பதாகவும் அப்படி நடக்காமல் தடுத்து நிறுத்த கடைசிக் கட்ட முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

என்ன நடக்கப் போகிறதென சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள். பார்ப்போம்.

– அறிவு

Leave a Response