திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – வேல்முருகன் திடீர் முடிவால் பாமக அதிர்ச்சி

தமிழக வாழ்வுரிமைக்கட்சித்தலைவர் பண்ருட்டி வேல்முருகன் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். பாமகவுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வரும் வேல்முருகன், டிடிவி தினகரனின் அமமுகவுடன் இணைவார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி மாலை, அண்ணா அறிவாலயம் வந்த அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். திமுக கூட்டணிக்கு தாம் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி வேல்முருகன் கூறியதாவது:

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொண்டேன். மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்தைப் பாலைவனமாக்கி விட்டது. மோடி சொல்வதைச் செய்வதற்கு, தோப்புக்கரணம் போட்டுக் காத்திருக்கின்றனர் தமிழக ஆட்சியாளர்கள்.

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எழுவர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் இந்த அரசு நாடகமாடுகிறது.

தமிழக மக்களை, விவசாயிகளை பெரிதும் பாதித்த 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது இந்த அரசு. 8 வழிச்சாலைக்காக வழக்குபோட்டது அன்புமணிதானே ?. இப்போது அந்த மக்கள் என்ன நினைப்பார்கள்?

இரயில்வே பணிகளில் வட மாநிலத்தவர்களுக்கே வேலை வழங்கப்படுகிறது. மத்திய அரசு பொது நிறுவனங்களில் தொடர்ந்து வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பாஜக சார்பில் ஒரு எம்.பி கூட தமிழகத்தில் வெற்றிபெறக் கூடாது. அதற்காக ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்வேன்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திமுக கூட்டணி சார்பாக இவர் பரப்புரை செய்வதாக முடிவெடுத்திருப்பதால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏனெனில் அக்கட்சியைப் பற்றி அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் அவருக்குக் கூடுதல் தகவல்கள் தெரியும் என்பதால் அவற்றைத் தேர்தல் நேரத்தில் வெளியிட்டுவிடுவாரோ? என்கிற அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response