தேர்தல் தேதி சொல்லுமுன்பே வேட்பாளர் பட்டியல் – ராகுல்காந்தி தெம்பு

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய அரசைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது.

ஏப்ரல், மே மாதம் 2 ஆம் வாரம் வரை மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது.

17-வது மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை 7 அல்லது 8 கட்டங்களாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இருக்க வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெறும் எனத் தெரிகிறது.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும், 10 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை காங்கிரசு மார்ச் 7 அன்று வெளியிட்டது.

குஜராத், உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரசு.

குஜராத்தில் 4 தொகுதிகளுக்கும், உ.பி.யில் 11 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

காங்கிரசு மிகவும் தெம்புடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டதையே இந்தப்பட்டியல் காட்டுகிறது என்கிறார்கள்.

Leave a Response