2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைக்கும் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்திருக்கின்றன. விஜயகாந்தின் தேமுதிகவை அக்கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன.
அது சீக்கிரம் முடியாமல் இழுத்துக்கொண்டே போகக்காரணம் என்ன? இதுபற்றி அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் செய்திகள்….
பாமகவுக்கு ஒதுக்கியது போலவே 7 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக கேட்கிறதாம்.அதோடு தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிடவேண்டும். எனவே அதிலும் எங்களுக்கு தொகுதி ஒதுக்கவேண்டும் என்று விஜயகாந்த் தரப்பு நிபந்தனை விதித்துள்ளதாம்.
அதிமுகவைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தல் வெற்றியைவிட சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அதற்கு முன்னுரிமை கொடுத்தே கூட்டணிப் பேச்சுகளை நடத்திவருகிறது அதிமுக.
அடி மடியிலேயே கை வைப்பது போல் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் இடம் வேண்டும் என்று தேமுதிக கேட்பதால்தான் கூட்டணி முடிவடையாமல் இழுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.