தொண்டர்களை மட்டுமல்ல மக்களையும் ஏமாற்றிவிட்டது பாமக – நடிகர் ரஞ்சித் கோபம்

2019 பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பாஜக ஆகிய கட்சிகளைக் கடுமையாக விமர்சனம் செய்துவந்த பாமக அக்கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பது பாமக தொண்டர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலர் புலம்பிக் கொண்டிருந்தாலும் சிலர் பகிரங்கமாகக் குற்றம் சுமத்திவிட்டு கட்சியை விட்டு விலகி வருகின்றனர்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார்.

கோவையில் நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராகப் பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.

மதுவுக்கு எதிராகப் போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல. இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றிவிட்டது.

நான்கு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கூறிவிட்டு எப்படி அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம்? அன்புமணி எப்படி மக்களிடம் சென்று வாக்குகள் சேகரிப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் நடிகர் ரஞ்சித்தைப் பலரும் பாராட்டுகின்றனர்.

Leave a Response