ஈரோட்டின் அடையாளங்களுள் ஒன்றான மணிக்கூண்டைக் காணவில்லை


ஈரோடு மாநகரில் பல்வேறு பெருமைகளின் ஒன்றாக இருப்பது மணிக்கூண்டு. ஈஸ்வரன் கோவிலின் எதிரில் செல்லும் ஈஸ்வரன் கோவில் வீதி நிறைவடையும் இடத்தில் கடைவீதியின் அடையாள சின்னமாக மணிக்கூண்டு இருந்தது. ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே அமைக்கப்பட்ட மணிக்கூண்டின் உச்சியில் கடிகாரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நேரத்தை காட்டும் இடமாகவும் மணிக்கூண்டு விளங்கியது.

காலப்போக்கில் அந்த மணிக்கூண்டு பழுதடைந்தது. ஆனால் மணிக்கூண்டு அமைக்கப்பட்டு இருந்த இடம் மட்டும் அதே பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாநகராட்சி மூலம் அந்த இடத்தில் மணிக்கூண்டு புதிதாக அமைக்கப்பட்டது. ஈரோட்டின் பாரம்பரிய பெயரான மணிக்கூண்டினை சிறப்பிக்கும் வகையில் 4 பக்கங்களும் மிகப்பெரிய கடிகாரங்கள் வைக்கப்பட்டது.

ஆனால் இந்த மணிக்கூண்டில் பொருத்தப்பட்ட விளக்குகள் பழுதடைந்த பின்னர் அவை சரி செய்யப்படவில்லை. கடிகாரம் பழுதடைந்து தவறான நேரத்தை காட்டியது. மணிக்கூண்டில் இருந்த 4 கடிகாரங்களும் 4 நேரங்களை காட்டி பொதுமக்களை குழப்பியது. எனவே மணிக்கூண்டினை பராமரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மணிக்கூண்டை காணவில்லை. நேற்று முன்தினம் வரை நடுரோட்டில் உயர்ந்து நின்று கொண்டிருந்த மணிக்கூண்டு மாயமானது. மணிக்கூண்டின் அடிப்பகுதி வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டப்பட்டு முழுமையாக அகற்றப்பட்டு இருந்தது. இது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியினர் பலரும் மணிக்கூண்டு இருந்த இடத்தை பார்வையிட்டு சென்றனர்.

பின்னர் தான் மணிக்கூண்டை புதுப்பித்து மீண்டும் அதே பகுதியில் வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதாக தெரியவந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மணிக்கூண்டு அமைக்கப்பட்டது முதல் அந்த பகுதியில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடை நிறுவனம் பராமரிப்பு உரிமை பெற்று இருந்தது. ஆனால் சரியாக பராமரிக்கப்படாததால் மணிக்கூண்டு பழுதடைந்தது. தற்போது மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அந்த தனியார் நிறுவனத்தினர் மணிக்கூண்டை சரியாக பராமரிக்க முடிவு செய்து உள்ளனர். அதை அப்படியே வைத்து பணி செய்வது சிரமம் என்பதால் வெட்டி எடுத்துச்சென்று உள்ளனர். விரைவில் மணிக்கூண்டு புதிய மாற்றங்களுடன் அழகிய தோற்றத்தில் அதே இடத்தில் அமைக்கப்படும்’ என்றார்.

Leave a Response