சித்திரைத் திருவிழா தொடக்கம் – மதுரை விழாக்கோலம்

மதுரையில் உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று காலை மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள தங்கக்கொடிமரத்தில் கோவில் பட்டர்கள் கொடி ஏற்றினர்.

கொடி மரத்திற்கு பூ மாலை சூட்டி, மலர்கள் தூவி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிசேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, கோயிலுக்குள் வாஸ்து சாந்தி (நிலத்தேவா் வழிபாடு) நடைபெற்றது.

இதில் கோயில் அதிகாரிகள், பக்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். ஏப்ரல் 19 ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிசேகம், ஏப்ரல் 20 ஆம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 21 ஆம் தேதி நடக்கிறது.

அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும்.

அன்றிரவு மீனாட்சியம்மன் மலர் பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 23 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

அழகர் கோயில் திருவிழா 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்குப் புறப்படுகிறார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி அவருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை, ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10க்குள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.

ஏப்ரல் 24 ஆம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல், இரவு இராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், ஏப்ரல் 25 ஆம் தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சியளித்தல் திருவிளையாடல் நடைபெறும்.

அன்று பிற்பகல் அரச அலங்காரத்தில் அழகர், அனந்தராயர் பல்லக்கில் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்குப் புறப்படுதல், அன்று இரவு இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நடைபெறுகிறது.

ஏப்ரல் 26 ஆம் தேதி அழகர் மலைக்குப் புறப்படும். அன்று இரவு அப்பன் திருப்பதியில் விடிய விடிய திருவிழா நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 27 ஆம் தேதி காலை 10.32 மணிக்கு மேல் 11 மணிக்குள் இருப்பிடம் வந்து சேரும்.

சித்திரைத் திருவிழா தொடங்கியிருப்பதால் மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Leave a Response