ஐஏஎஸ் அகாடமி சங்கர் தற்கொலை தமிழகத்துக்கு பேரிழப்பு – கல்வியாளர்கள் அதிர்ச்சி

ஐஏஸ் ஆக முடியவில்லையே என்று சோர்ந்துபோய் விடாமல், தன்னைப் போல இருக்கும் பல மாணவர்களும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமியைத் தொடங்கியவர் சங்கர்.

மத்திய குடிமைப்பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் யுபிஎஸ்சி – சிவில் சர்வீஸ் தேர்வுகள், டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் குரூப்-1 உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் அகாடமியாக சங்கர் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. சென்னை அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களிலும் பிற மாநிலங்களிலும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

சங்கர் சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தார். வைஷ்ணவி என்ற மனைவி இருகுழந்தைகள் உள்ளனர். சமீபகாலமாக சங்கருக்கும் அவரது மனைவி வைஷ்ணவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் மனைவி, குழந்தைகள் வெளியே சென்ற போது சங்கர் வீட்டின் படுக்கையறையில் நேற்று இரவு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சங்கரை மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சங்கரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சங்கரின் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பது குறித்து மயிலாப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ், தமிழக அரசுப் பணியின் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் என்று லட்சியத்தைத் தாங்கியபடி கனவுகளைச் சுமந்துவந்த பல்வேறு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதைத்து, அவர்களை வெற்றியாளர்களாக மாற்றிய சங்கர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் சங்கரின் தற்கொலை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இன்று சங்கரின் மாணவர்கள் ஐ.ஏ எஸ், ஐ.பி.எஸ்களாக இந்தியாவெங்கும் நிறைந்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கர் மரணம் தமிழகத்திற்கு மிகப்பெரும் இழப்பு

என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Leave a Response