பிரதமர் மோடிக்கு செவிட்டுக்காது – பிரசாந்த்பூஷன் ஆவேசம்

கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்,

கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சமுதாய ஆர்வலர் ஜிடி அகர்வால் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்தார்.

87 வயதான ஜிடி அகர்வால் சுவாமி க்யான் சுவரூப் சதானந்த் என்ற பெயரில் அறியப்பட்டு வந்தவர். 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்த அவரை அக்டோபர் 10 அன்று ஹரிதுவாரில் இருந்து ரிஷிகேஷில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது காவல்துறை.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஜூலை 22-ல் உண்ணாவிரதம் தொடங்கி அவர் வெறும் தண்ணீர் மட்டும் தேனுடன் கலந்து அருந்தியுள்ளார். தன்னுடைய கோரிக்கையை அரசு நிராகரித்ததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதையும் நிறுத்திவிட்டார்.

ஜிடி அகர்வால் கான்பூர் ஐஐடியில் பேராசிரியராக பயணியாற்றியவர். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலும் பணியாற்றியவர். ஏற்கனவே நதிகளைக் காக்க வேண்டும் என்று உண்ணவிரதம் இருந்தவர்.

2009 ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் காரணமாக பகிராதி நதியில் அணை கட்டுவது நிறுத்தப்பட்டது.

இந்தத் தகவலைப் பதிவிட்டுள்ள வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், மோடியின் செவிட்டுக் காதில் அவருடைய கோரிக்கைகள் கேட்காத நிலையில் உயிரிழந்து உள்ளார். இந்த உலகம் புனிதமான ஆத்மாக்களுக்கானது கிடையாது என வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

ஜி.டி.அகர்வால் மறைவு தொடர்பாக இதழாளர் சாவித்திரிகண்ணன் எழுதியுள்ள குறிப்பில்….

பறி கொடுத்துவிட்டோம் சுற்றுச் சூழல் போராளி ஜி டி அகர்வால் எனப்படும் சுவாமி கியான் ஸ்வரூப் சதானனந்த் அவர்களை!

இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாகத் திகழும்
இயற்கை அன்னையான கங்கை நதி மிக மோசமாக மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தியும்,குறிப்பாக கங்கை படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி போராடிய, சதானந்த்தின் 111 நாட்கள் உண்ணாவிரதம் அவரது மரணத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று முன் தினம் வரை தண்ணீரும்,சிறிதளவு தேனும் மட்டுமே உட்கொண்டுவந்த சுவாமி சதானந்த்,’’பல முறை பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கும் நினைவூட்டல் கடிதம் எழுதியும் சிறிதளவு கூட ரெஸ்பான்ஸ் இல்லை.ஆகவே இனி எதையும் உட்கொள்ளமாட்டேன்.என் மரணத்திற்கு பின் இளைய தலைமுறை இந்த போராட்டத்தை நிச்சயம் கையில் எடுப்பார்கள்’’ என அறிவித்தார்!

அப்போதும் அதிகார மையம் அசைந்து கொடுக்காத நிலையில் தான் அவர் உயிர் துறக்க நேரிட்டுள்ளது.

2009 ல் இவர் இதே போல் உண்ணவிரதம் இருந்த போது, 38 வது நாளில், மன்மோகன் சிங்,பகிராதி நதியில் கட்டவுள்ள அணைதிட்டத்தை வாபஸ் பெற்றார் என்பது கவனத்திற்குரியது.

ஆனால்,தொழிற்சாலைகழிவுகள்கொட்டப்படுவது, கங்கையை ஒரு மாபெரும் குப்பைக்கிடங்காக கருதுவது.. போன்ற நிலைமைகள் தொடர்ந்த நிலையில், மற்றொரு துறவியான சுவாமி நிகமானந்தா 100 நாட்களுக்கும் மேல் உண்ணாநோன்பிருந்து இறந்தது 2011 ல்!

பா ஜ க அரசு தனது தேர்தல் வாக்குறுதியிலேயே கங்கை நதி தூய்மைக்கு உத்திரவாதம் சொன்னது!.
வாரணாசி தொகுதி வேட்பாளரான மோடி, கங்கை தூய்மைக்கு 20,000 கோடி திட்டமெல்லாம் அறிவித்தார். ஆனால்,இது வரை அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை, நாளுக்கு நாள் ஹைட்ரோ கார்பன் திட்டம், சுரங்கம் தோண்டும் திட்டம்..என சர்வதேச கார்பரேட் நிறுவனத் திட்டங்களை கங்கை படுகையில் அமல்படுத்துவதிலேயே மோடி அரசு மும்முரம் காட்டி வந்ததது.

அது புனித கங்கையை பாவ கங்கையாக மாற்றியே தீருவது என கங்கனம் கட்டிவிட்ட பிறகு உண்ணாவிரதமாவது,போராட்டமாவது…?
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் அமெரிக்க கோகோ கோலா நிறுவனம் கங்கை தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளையடிக்கவும்,பின் கழிவு நீரை கங்கையில் கொட்டவும் அனுமதி வழங்கப்பட்டது என்பதை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

இந்து தர்மத்தை காக்க புறப்பட்ட காவலர்கள் வேஷமெல்லாம் தேர்தல் நேர ஒட்டு வேட்டைக்கு! இவர்கள் உண்மையில் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் கைக்கூலிகள் என்பது தான் உண்மை முகமாகும்!
87 வயது தூய துறவி,சுவாமி கியான்ஸ்வரூப் சதானந்த் அவர்களே, உங்கள் உயிர்த் தியாகம் வீண்போகாது.கண்ணீர் மல்க வீரவணக்கம் செலுத்துகிறோம்.,உங்கள் போராட்டத்தை நம் இளைய தலைமுறை முன்னெடுக்கும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response