முத்துராமலிங்கமும் காமராசரும் தனிநாடு கேட்டிருக்கவேண்டும் – சீமான் கருத்து

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தொகுதி வாரியாக வழக்கறிஞர்கள் குழு நியமிப்பது குறித்தும் தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

ஆசிரியர்கள் போராடியதால் சம்பளம் பிடித்துள்ளனர். கேட்காமலேயே பெண்களுக்கு தேர்தலைக் கருத்தில் கொண்டு பணம் கொடுக்கின்றனர். ஒரு நாட்டின் எதிர்காலம் ஆசிரியர்களை நம்பி உள்ளது. ஆசிரியர்கள் தெருவில் நின்று போராடிக்கொண்டு இருக்கின்றனர். மாணவர்களின் நிலை என்னவாகும்? டாஸ்மாக் பணியாளர்கள் வீதியில் நின்று போராடினால் அரசு வேடிக்கை பார்க்குமா?

போக்குவரத்துத் துறை ரூ.1 இலட்சம் கோடி கடனில் உள்ளது. கடனில் இருக்கும் போது இலவசப் பேருந்து பயணத்தை அறிவிப்பது ஏன்? கடன் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாகக் கொண்டு ஆட்சி நடக்கிறது. இது ஒரு ஆட்சி, மீண்டும் ஒரு தேர்தல், அதில் நாங்கள் தான் வெல்வோம் என்று சொல்கிறார்கள்.

ரூ.6,500 கோடியை பொங்கலுக்காக அரசு செலவு செய்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.58 கோடி தான் செலவாகும். திமுக-வுக்கு வாக்களித்த ஆசிரியர்கள் தான் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.

திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் தான் போட்டி என அதிமுக சொல்கிறது,அது அவர்களுக்குள் உள்ள சண்டை.யார் அதிகம் கொள்ளை அடிப்பது,யார் அதிகம் காசு கொடுப்பது என்பதில் அவர்களுக்குள் போட்டி.

எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரிடம் இருந்து கற்றுக் கொண்டதாக விஜய் சொல்லி இருக்கிறார், அது தம்பியின் தனிக்கருத்து.அவர்கள் கொள்கைத் தலைவர்களை எதற்காக வைத்துள்ளனர்.எந்தத் தலைவரிடம் எந்தக் கருத்தை எடுத்துக்கொண்டோம் என தெளிவாகச் சொல்லவேண்டும்.

முத்துராமலிங்கத் தேவர் மீதும்,காமராஜர் மீதும் எனக்கு வருத்தம் உள்ளது.பகிரங்கமாகச் சொல்கிறேன்.ஜின்னா தனிநாடு கேட்டது போல இங்கும் தனிநாடு கேட்டிருக்க வேண்டும்.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றது காங்கிரசு. அப்போது திமுக காங்கிரசு கூட்டணியில்தான் இருந்தது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு வராமல் தடுத்தது காங்கிரசுதான். அவர்களைத்தான் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கூட்டணி வைத்துள்ளனர்.

ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் வாக்குப் பெறுபவன் நான்.ஓட்டுக்கு ஒருரூபாய் கூடக் கொடுக்காமல் தேர்தலை சந்திக்கத் தயாரா? ஓட்டுக்குக் காசு கொடுக்காமல் தேர்தலைச் சந்திக்க இங்கு எந்தத் தலைவர்கள் உள்ளனர். வாக்குகளைப் பெறுவதற்காக கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்துள்ளனர். இதுதான் தேர்தல் அரசியல். கடந்தாண்டு பொங்கலுக்கு பரிசுத்தொகை கொடுக்கவில்லை ஆனால் இந்த ஆண்டு, ரூ.3 ஆயிரம் கொடுத்துள்ளனர். இதைத்தான் தேர்தல் அரசியல் என்று சொல்கிறோம்.நாங்கள் செய்வது உண்மையான வளர்ச்சி அரசியல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response