இந்திய வரலாற்றின் திசையே மாறிப்போகும் என அஞ்சும் பாஜக – பழ.நெடுமாறன் தாக்கு

சிவகங்கை மாவட்டம், கீழடியில், மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா 2015, 2016-ஆம் ஆண்டுகளில் கீழடியில் அகழாய்வு மேற்கொண்டார். இந்நிலையில், அதில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் தொடர்பான ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா தயாரிக்க மத்திய தொல்லியல் துறை திடீர் தடை விதித்துள்ளது.

கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்ட ஆய்வுமூலம் தமிழகத்தில் சங்ககாலநகரம் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும் 5,800 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. இதில்இரண்டு பொருட்களை அமெரிக்காவில் உள்ள கார்பன் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி பரிசோதித்ததில் அந்தப் பொருட்கள் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டது.இதன் மூலம் பழங்கால தமிழர்கள் நகர நாகரிகங்களுடன் வாழ்ந்தசான்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், 3 ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளவிருந்த கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணா திடீரென அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், கீழடி அகழாய்வை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை ஏற்பட்டது. பின்னர், ராமன் மேற்கொண்ட ஆய்விலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.

இதனிடையே, அமர்நாத் ராமகிருஷ்ணா அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 5,800 பொருட்கள்பெங்களூருவிலும், சென்னையிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தற்போது அதன் ஆய்வறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு மத்திய தொல்லியல் துறை திடீர்தடை விதித்துள்ளது. அவருக்குப்பதிலாக அதே பிரிவின் கண்காணிப்பாளரான ஆந்திராவைச் சேர்ந்த லெட்சுமி என்பவரை ஆய்வறிக்கை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழர் தேசிய முன்னணி
தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகத் தொன்மையான நகர்ப்புற நாகரீகம் கீழடியில் கண்டறியப்பட்டது.

இந்த அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திய
மத்திய தொல்லாய்வுத் துறை அதிகாரி
அமர்நாத் இராமகிருஷ்ணன் இடைக்கால அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தார்.

இறுதி அறிக்கையை அளிப்பதற்குள் அவரும் அவருக்குத் துணையாகப் பணியாற்றிய அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இடைக்கால அறிக்கையை அளித்தவர் தான் இறுதியான முழுமையான அறிக்கையை அளிக்க முடியும்.

ஆனால்,இறுதி அறிக்கையை அளிக்கும் பொறுப்பு
பெங்களூருவில் உள்ள ஒரு அதிகாரிக்கு மாற்றப்பட்டுள்ளது.இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கீழடியின் ஆய்வில் அறியப்பட்டுள்ள உண்மைகள் வெளிவந்தால் இந்திய வரலாற்றின் திசையே மாறிப் போகும் என மத்திய அரசு அஞ்சுவதால் தான் இவ்வாறு செய்திருக்கிறது என குற்றம் சாட்டுகிறேன்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response