7 தமிழர் விடுதலை – ஈரோடு முன்னெடுத்த புதுமுயற்சி

தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று, நளினி – பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக ஆளுநரைக் கோரும் அஞ்சலட்டை அனுப்பும் நிகழ்வு இன்று ஈரோட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான அஞ்சலட்டைகள் இன்று அனுப்பப்பட்டதால், தலைமை அஞ்சகம் கடிதங்களால் மூழ்கியது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்பொருளாளர் கணேசமூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர் பேரவை நிறுவனத்தலைவர் இரா.அதியமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலத் தலைவர் விநாயக மூர்த்தி, நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு மாவட்டச் செயலர் அ.தமிழ்ச்செல்வன், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், நீரோடை அமைப்பின் தலைவர் நிலவன், தந்தை பெரியார் திராவிடர் கழக ஈரோடு மாவட்டச் செயலாளர் குமரகுருபரன், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக வழக்குரைஞர் செயப்பிரகாசம், கோபி தாய்த் தமிழ்ப்பள்ளித் தாளாளர் கோ.வெ.குமணன், தமிழ்த் தேசப் பேரியக்க நாமக்கல் மாவட்டச் செயலர் ஆறுமுகம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலப் பொறுப்பாளர் மாரிமுத்து, தமிழ்நாடு மக்கள் மன்றப் பொருளாளர் கணியன் பாலன், காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கட்சி மா.லெ. விடுதலை அமைப்பின் நாமக்கல் மாவட்டச் செயலர் கோவிந்தராஜ், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் செயலர் அறச்சலூர் செல்வம், அகில இந்திய மக்கள் நலக் குழுவின் சார்பாக டி.கே.பழனிச்சாமி, தூரிகை ஓவிய இயக்கம் சார்பாக சி.கதிர்வேல் மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் ( பியூசிஎல் ) சார்பாக கண.குறிஞ்சி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, திராவிடர் கழகம், எஸ்டிபிஐ கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழகத்தொழிலாளர் முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, மக்கள் பாதை போன்ற பல்வேறு அமைப்பின் பொறுப்பாளர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் என எண்ணற்றவர்கள் பங்கேற்று அஞ்சல் அட்டைகளைக் குவித்தனர்.

முன்னதாக இந்நிகழ்வு தொடங்கும் முன்பு கூட்டம் கூடக் கூடாது எனக் காவல்துறை கடுமையாக நெருக்கடி கொடுத்தது. ஆயினும் ஈரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்கள் தலையிட்டுச் சனநாயக உரிமையைத் தடை செய்வது முறையல்ல எனச் சுட்டிக் காட்டி, நிகழ்வை ஒழுங்கமைத்தார்.

இந்நிகழ்வு முடிவடைந்தவுடன், இயக்கங்கள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி அடுத்த கட்டச் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்பொழுது ஏழு தமிழர் விடுதலையைத் தமிழகம் தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் எனவும், கொளத்தூர் மணி அவர்கள் அதற்கான ஒருங்கிணைப்பு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. அவரும் அதற்குத் தனது இசைவினைத் தெரிவித்துள்ளார்.

எனவே ஏழு தமிழர் விடுதலைக்காக விரைவில் தமிழகம் தழுவிய அளவில் மிகப் பெரும் முன்னெடுப்புகள் வரவிருக்கிறது. அது ஈரோட்டில் தொடங்கியிருக்கிறது.

Leave a Response