13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ ((YMCA)) மைதானத்தில் அறிவு சார் திருவிழாவான 43 ஆவது புத்தகக் கண்காட்சி, சனவரி 9 ஆம் தேதி தொடங்கியது. 750 அரங்குகள், பல்வேறு தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள், வாசகர்கள் எழுத்தாளர்களுடன் உரையாட முற்றம் அறை, புத்தக வெளியீட்டு மேடை, 3 ஆயிரம் சதுரஅடியில் தொல்குடி தமிழர் நாகரிக வரலாற்றை பறைசாற்றும் கீழடி – ஈரடி அரங்கு, மணலில் வடிவமைக்கப்பட்ட வள்ளுவர் உருவம் என பல்வேறு ஏற்பாடுகளுடன் களைகட்டி காணப்பட்டது இந்த புத்தகக் காட்சி.

இயற்கை வேளாண், உயிரினங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்ட காக்கைக் கூடு, இயல்வகை போன்ற அரங்குகளும், புத்தகம் கொடுத்து புத்தகம் எடுத்துக்கொள்ள அமைக்கப்பட்ட லிட்ஸ் மீட் ((LITS)) அரங்கும் வாசகர்களிடையே தனிக் கவனம் பெற்றன.

புத்தகக் காட்சியின் தனித்த அடையாளமாகத் திகழ்ந்த, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கீழடி – ஈரடி என்ற அரங்கில் 24 மொழிகளில் கிடைக்கப்பெற்ற கீழடி அகழ்வாய்வு குறித்த புத்தகம் 20 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

வாசகர்கள்- எழுத்தாளர் சந்திப்புக்கு மையமாக புத்தகக்காட்சி விளங்கியதாகவும், இளைஞர்கள் பெருமளவில் வருகை தந்ததாக பபாசி தலைவர் சண்முகம் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் புத்தகக் காட்சியை காண வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புத்தகக் காட்சியை 13 இலட்சம் பேர் பார்வையிட்டதாகவும், 60 இலட்சம் புத்தகங்கள் விற்பனையானதாகவும் கூறியுள்ள பபாசி, இதன்மூலம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

Leave a Response