
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டில், தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். பாலாஜியும் பொன்னம்பலமும் ஆரம்பத்தில் நாமினேட் செய்யப்பட்டு, ஒவ்வொரு முறையும் நேயர்களால் காப்பாற்றப்பட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒருகட்டத்தில், பொன்னம்பலம் வெளியேறினார்.
’ஐஸ்வர்யா இதுவரை நாமினேட் செய்யப்படவில்லை. அவர் நாமினேட்டாகி, மக்கள் முன்னே சென்று வந்தால், தெரியும் அவருக்கான செல்வாக்கு’ என்று ரித்விகா, ஜனனி முதலானோர் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
அதன்படியே இந்த முறை ஐஸ்வர்யா நாமினேஷன் பட்டியலில் இருந்தார். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா பொய் சொன்னதையும் பொய்க்கு மேல் பொய்யாகச் சொல்லிக்கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்டிய கமல், பாக்கெட்டில் கையைவிட்டுக்கொண்டே, ‘நான் முடிவு எடுக்கறதா இருந்தா, ஐஸ்வர்யாவுக்கு இதைக் கொடுப்பேன்’ என்று பாக்கெட்டில் இருந்து ரெட்கார்டு எடுத்துக் காட்டினார்.
ஆனா, நீங்க வேறவிதமா நினைக்கிறீங்களே என்று மக்களைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், ‘புள்ளிவிவரத்தின் படி ஐஸ்வர்யாவைக் காப்பாற்றுவதற்கு விழுந்த ஓட்டுக்களைத் திரையில் காட்டினார் கமல்.
‘கோடிக்கணக்கான பேர் பிக்பாஸ் பாக்கறீங்க. ஆனா ஐஸ்வர்யாவுக்கு விழுந்த அதிகப்படியான ஓட்டுக்களே, லட்சங்களுக்குள்ளேதான். நீங்க டிவிட்டர்லயும் பேஸ்புக்லயும் பொங்குறீங்க. கோபப்படுறீங்க. இந்த ஓட்டுக்களையும் போட்டாத்தானே, உங்க மனசுப்படியும் உங்க விருப்பப்படியும் பிக்பாஸ் வீட்ல சம்பவங்கள் நடக்கறதோ, ஆட்கள் வெளியேறுவதோ நடக்கும்’ என்றார் கமல்.
கமல் வெளிப்படையாக இப்படிப் பேசியதால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தோல்வி என்பதை அவரே ஒப்புக்கொண்டது போல் ஆகிவிட்டது என்று பலரும் சொல்கிறார்கள் .


