சீனாவுடன் போட்டிபோடும் சக்தியுடைய நெசவாளர்களுக்கு உதவுங்கள் – சத்யபாமா எம்.பி வலியுறுத்தல்

நலிந்திருக்கும் கைத்தறி, விசைத்தறி நெசவைப்பாதுகாக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கைக் கடிதங்களை அளித்திருக்கிறார் திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா.

அவர் கொடுத்த கடித விவரங்கள்…

கடிதம் 1:

பொருள்: சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு பெறும் கைத்தறி தரைவிரிப்புகளில் பவானி ஜமக்காளத்தையும் சேர்க்குமாறு கோரி

தமிழ்நாட்டில் திருப்பூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் உள்ளடங்கிய பவானி பகுதியில் பாரம்பரியமாக கைத்தறி நெசவாளர்களால் கையால் நெய்யப்படும் பிரசித்தி பெற்ற ஜமக்காளத்தை பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஜி எஸ்டி வரி விதிப்பு அமலாவதற்கு முன் பவானி ஜமக்காளத்துக்கு அனைத்து வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜி எஸ் டி அமல் செய்யப்பட்ட பிறகு வரி விலக்கு பெறும் பொருட்களின் பட்டியலில் பவானி ஜமக்காளம் இடம்பெறவில்லை.

இந்த அரிய படைப்பு தரைவிரிப்பு பொருட்களின் வகை சார்ந்ததா என்பது பற்றி பெரிய குழப்பும் நிலவுகிறது/ கடந்த 300 ஆண்டுகளாக பவானி பகுதி வாழ் நெசவாளர்களால் பாரம்பரியமாக கையால் நெய்யப்பட்டு வரும் படைப்பாகும்.

இது ஒரு குடிசைத் தொழிலாகும். இதனால் இந்தப் பகுதியைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வேலைவாய்ப்பையும் வாழ்வாதார உதவியையும் பெற்றுள்ளனர். எனவே ஜி எஸ் டியில் இருந்து இந்த அரிய பொருளுக்கு விலக்கு அளிக்கவேண்டியது அவசியம்.

எனவே பவானி ஜமக்காளத்தை உருவாக்குவதிலும் விற்பதிலும் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு பெறும் கைத்தறி தரைவிரிப்புகளில் பவானி ஜமக்காளத்தையும் சேர்க்குமாறு கோரி மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

கடிதம் 2:

பொருள்:விசைத்தறி துறையைப் பாதுகாக்கும்வகையில் குறிப்பிட்ட காலத்துக்கான வங்கிக்கடன்களை (டெர்ம் லோன்) தள்ளுபடி செய்வதுதொடர்பாக.

தமிழ்நாட்டில் விசைத்தறி தொழில்துறை பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது. தானியங்கி விசைத்தறியின் அறிமுகம், சீனப் பொருட்களின்பயன்பாடு ஆகியவை உள்ளிட்ட பலகாரணங்களால் விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு ள்ளது.

இதன் காரணமாக பல ஆயிரம் விசைத்தறிதொழில் கூடங்கள் கடனில் மூழ்கியுள்ளதோடு பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 6 லட்சம் விசைத்தறித்தொழில் கூடங்கள் சுமார் 10 லட்சம்தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தையும்வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகின்றன. ஜி.எஸ்.டி வரி முறைமையில் மத்திய அரசுக்கு 2500 கோடி ரூபாயை அவர்கள் ஈட்டித் தருகின்றனர்.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 95 சதவிகித விசைத்தறிகள் ஒப்பந்த வேலை அடிப்படையில் செயல்படுகின்றன. கடன்கள் மற்றும் வங்கிக் கடன்கள் காரணமாக அவற்றில் பல அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சுழலில் வங்கியின் டெர்ம் லோன்களை தள்ளுபடி செய்யும் வகையும் வங்கிகளுக்கு அறிவுறுத்த சிறப்பு நிதி உதவித் திட்டத்தை கொண்டுவந்து இத்தகைய நெசவாளர்கள் மீண்டும் தங்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்த வாய்ப்பு ஏற்படுத்துமாறு மாண்புமிகு அமைச்சர்அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஜவுளிஉற்பத்தியாளர்கள் கொடுக்கும் நெசவுத் தொழிலாளர்களுக்கான குறைந்த அளவு கட்டணங்களின் சுமையில் இருந்து விசைத்தறிதொழில் கூடங்களைக் காக்குமாறு மாண்புமிகுஅமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சந்தை நிலவரத்துக்கு ஏற்ப போட்டிபோடவும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நூலிழைகளுடன் போட்டிபோடும் அளவுக்கு போட்டித்தன்மையை உருவாக்கவும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நூலிழைகளுக்கு ANTI DUMPING தீர்வையை அறிமுகம் செய்யுமாறும் பாரம்பரியமாக விசைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வரும் இலட்சக்கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் விசைத்தறித் துறையைக் காத்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

இவ்வாறு அந்தக் கடிதங்களில் கோரப்பட்டிருக்கிறது.

Leave a Response