இரண்டு பேரைக் காட்டிக் கொடுத்த நிர்மலாதேவி – விசாரணையில் பரபரப்பு

கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்த குற்றச்சாட்டில் கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை சி.பி.சி.ஐ.டி.காவலர்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து, விசாரணை அதிகாரியான கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை கண்காணிப்பாளர் சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர்.

இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்ததாம்.

பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனத்தையே பதிலாகத் தந்தார் என்றும், மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னைத் தூண்டியதாக தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அவரது வாக்குமூலத்தை காணொலியில் பதிவு செய்கின்றனர்.

இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினரின் ஒரு தரப்பு, காமராஜர் பல்கலைக்கழகம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது. பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சோதனை நடத்திய அவர்கள், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலாதேவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் பற்றித் தெரியவரும்.

அவர் பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை சேகரித்து வருகிறோம். பேராசிரியை நிர்மலாதேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.

பேராசிரியை நிர்மலாதேவி வாக்குமூலத்தின் அடிப்படையில், துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தத் திட்டமிட்டு உள்ளனர்.

ஆனால் இருவரும் தலைமறைவாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. இவர்களைப் பிடித்தால் வழக்கு அடுத்த கட்டட்த்துக்குச் செல்லும் என்கிறார்கள்.

Leave a Response