
பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் 2018, 8வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார் பெங்களூரு கேப்டன் விராட் கோலி.
முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கிங்ஸ் லெவன் அணி ராகுல் (47) மற்றும் கேப்டன் அஸ்வின் (33) ஆகியோரது பங்களிப்பினால் 155 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் காலி செய்தார். கேஜ்ரோலியா, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி போராடியே வென்றது. கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பவுண்டரியில் 159/6 என்று 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் புள்ளிகளைப் பெற்றது.
இந்தப்போட்டியில் நடந்த சுவையான நிகழ்வு…
மெக்கல்லம் ஆட்டமிழந்த பிறகு பெங்களூரு அணித்தலைவர் விராட் கோலி இறங்கினார், விக்கெட் எடுத்த ஓவரில் சிக்கனமாக வீச முடியாத அக்சர் படேல், விராட் கோலிக்கும், பிறகு டிக்காக்குக்கும் இரண்டு பவுண்டரிகளை வழங்கி முதல் ஓவரில் 10 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.
பிறகு அஸ்வின் வீசிய பந்தில், கீப்பர் பின்னால் ஒரு பவுண்டரி அடித்தார் விராட் கோலி.
3வது ஓவரை ஆப்கான் இளம் லெக் ஸ்பின்னர் 17 வயதான முஜீபுர் ரஹ்மான் வீசினார். கோலி, டிகாக் இருவருக்கும் வீசினாலும் அந்த ஓவரில் 3 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்தார் முஜீப்.
வேகப்பந்து வீச்சாளர் டை வந்தவுடனேயே மந்தமான இந்தப் பிட்சில் விராட் கோலி அவரை லாங் லெக்கில் புல்ஷாட் பவுண்டரியுடன் வரவேற்றார், பிறகு ஒரு ராஜ கவர் டிரைவ் பவுண்டரி என்று 13 பந்துகளில் அனாயசமாக 21 ரன்கள் வந்தார் விராட் கோலி.
அடுத்த ஓவரில்தான் விராட் கோலிக்கு முஜீபிடமிருந்து அதிர்ச்சி காத்திருந்தது. 5 ஆவது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி கடுமையாகத் திரும்பி கோலியின் மட்டை, கால்காப்பு இடைவெளியில் புகுந்து ஸ்டம்புகளை வீழ்த்தியது. கோலி டிரைவ் ஆட முயன்றார்.
மிக அருமையான பந்து வீச்சு,இதை எதிர்பாராத விராட் கோலி அதிர்ச்சியடைந்தார் என்று விமர்சகர்கள் சொல்கின்றனர்.


