தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு,சித்திரை வசந்த விழா – இராமதாசு வாழ்த்து

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசின் சித்திரைத் திருநாள் வாழ்த்துச் செய்தி ….

வசந்தகாலம் தொடங்குவதை தமிழ் மண்ணுக்கு எடுத்துக் கூறும் சித்திரை திருநாளை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு காலத்தில் சித்திரை மாதம் செல்வம் பொங்கும் மாதமாக திகழ்ந்தது. காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வரும்போதிலும் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஆனால், அவையெல்லாம் இப்போது கனவாகிவிட்டன.

கொண்டாட்டங்களில் திளைக்க வேண்டிய தமிழகம், அதன் உரிமைகளைக் காக்கவும், மீட்கவும் கொளுத்தும் வீதிகளிலும், சாலைகளிலும் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். காவிரிகளின் கரைகளை இணைத்துக் கொண்டு காவிரி ஆறு ஓடியக் காட்சிகளும், வயல்வெளிகள் பசுமைக் காடாக விரிந்து கிடந்த காட்சிகளும் இனி காணக் கிடைக்குமா? என்பது உறுதியாகத் தெரியவில்லை.

சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகளும் விரைவில் அகலும். உணவு படைக்கும் கடவுளரான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

Leave a Response