இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளின் நகரில் ஜூன் 29 அன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணித்தலைவர் கேரி வில்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி இந்தியா அணியின் சார்பில் லோகேஷ் ராகுல் மற்றும் கேப்டன் வீராட் கோலி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் வீராட் கோலி 9(8) ரன்களில் சாஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி அதிரடியில் கலக்கியது. அயர்லாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் அணியின் ரன்ரேட் வேகமாக அதிகரித்தது. அப்போது லோகேஷ் ராகுல் 70(36) ரன்கள் எடுத்திருக்கும் போது கேவின் ஒ பிரைன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரெய்னாவும் 69(45) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா 0(2) ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடி காட்டினர். இதில் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இறுதியில் மணிஷ் பாண்டே 21(20) ரன்களும், ஹர்திக் பாண்டியா32(9) ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். அயர்லாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கெவின் ஒ பிரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், அயர்லாந்து அணியின் சார்பில் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஜேம்ஸ் ஷனோன் ஆகியோர் களமிறங்கினர். இதில் பால் ஸ்டிர்லிங் 0(2) ரன் ஏதும் எடுக்காமல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில்லியம் போர்டர்பீல்ட் 14(11) ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் போல்ட் ஆனார். அடுத்ததாக ஜேம்ஸ் ஷனோன் 2(7) ரன்களில் சித்தார்த் கெளல் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரு பால்பிர்னி 9(7) ரன்களில் சாஹல் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கெவின் ஒ பிரைன் 0(2) , சிமி சிங் 0(2) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். அணியை தோல்வியிலிருந்து மீட்க போராடிய கேப்டன் கேரி வில்சன் 15(18) ரன்களில் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக ஜார்ஜ் டாக்ரெல் 4(8) ரன்களுக்கும், ஸ்டுவர்ட் தாம்ஸன் 13(9) ரன்களும், பாய்ட் ராங்கின் 10(8) ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியில் அயர்லாந்து அணி 12.3 ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், சித்தார்த் கெளல், பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன் மூலம் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.