
அண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் சீமான் கூறிய கருத்துகளின் ஒரு பகுதி…
சோனியா காந்தி இந்தியாவிற்கு அந்நியர்; ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு அந்நியர்! அந்நியர்கள் இனியும் தமிழ்நாட்டை ஆள்வதற்கு விடமாட்டோம்..! – சீமான் சீற்றம்
எல்லோரும் நல்லவர்கள் ஆளவேண்டும் என்கிறார்கள்..?
வெள்ளைக்காரர்கள் 300 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார்கள். அவர்கள்தான் இந்நாட்டையே கட்டினார்கள். அதற்காக அவர்களை இந்தியர்களாக ஏற்கமுடியுமா? நல்லவர் ஆண்டால் போதும் என்றால், வெள்ளைக்காரர்களில் ஒருவர்கூட நல்லவர் இல்லையா? அவர்கள்தான் பாராளுமன்றம், சட்டமன்றம் கட்டினார்கள்; அணைகள் கட்டினார்கள்; தந்தியைக் கொண்டு வந்தார்கள்; தொடர்வண்டித்துறையைக் கொண்டு வந்தார்கள். அவர்களை எதற்கு விரட்டினார்கள்? முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக் நல்லவர்தானே? வெள்ளையனை வெளியேற்றியது நல்லவர்களா கெட்டவர்களா என்ற அடிப்படையில் அல்ல; அந்நியர்களிடமிருந்து அடிமைப்பட்ட நம் மண்ணின் உரிமையை மீட்கவே! அந்தவகையில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்பதையும் தாண்டி மண்ணின் மைந்தர்களுக்கான உரிமை மிக முக்கியமானது! எங்கள் ஆட்சியாளர்களிடம் சில பல குறைபாடுகள் இருக்கலாம்; அதை மண்ணின் பிள்ளைகள் நாங்களே சரிசெய்துகொள்கிறோம்!
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்கிறார்கள்?
அப்படியானால் சோனியா காந்தியை இந்தியாவின் பிரதமர் ஆகவிடாமல் ஏன் தடுத்தனர்..? இன்று ரஜினிகாந்தை ஆதரிக்க ஜனநாயகம் பேசுவோர் பலர் அன்று சோனியாகாந்தியைக் கடுமையாக எதிர்த்தது எதனால் என்று கூறமுடியுமா..? ஏன் இவர்கள் பேசும் ஜனநாயகம் எங்கள் மாநிலத்தில் மட்டும் இருக்கிறது?
சோனியா காந்தி இந்தியாவிற்கு அந்நியர் என்றால் ஐயா ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு அந்நியர் அவ்வளவுதான். தமிழ்நாட்டை அந்நியர்கள் இனியும் ஆள்வதற்கு விடமாட்டோம்.
பன்னெடுங்காலமாக இந்த நிலத்தில் நிலைத்து அறத்தின் வழிநின்று ஆட்சிசெய்து, உலகத்திற்கே அறிவைக் கடனாகக் கொடுத்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஆனால் ரஜினிகாந்த் மட்டுமே நல்லவர் அவர் தான் ஆளத் தகுதியானவர் என்று கூறுவது இங்குள்ள 8 கோடி தமிழர்களில் ஒருவர் கூட நல்லவன் இல்லை, தகுதியானவன் இல்லை என்று நிறுவ முயற்சிக்கிறார்கள்..!
உலகையே அறத்தின் வழி நின்று கட்டி ஆண்ட இனத்தின் மக்களுக்குத் தங்கள் தாய்நிலத்தை ஆள்வதற்குத் தகுதியில்லை என்று நிறுவ முயல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது!
எதை வைத்து ரஜினிகாந்த் நல்லவர் என்கிறார்கள்..?
சமிபத்தில் நடைபெற்ற அனிதா மரணம், மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுப்படுகொலை, ஒகி புயலில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மரணம், ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாகக் கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தில் பல தமிழர்கள் தாக்கப்பட்டதும் அவமானப்படுத்தப்பட்டதும், நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டதும் தமிழர்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது, நெடுவாசல் கதிராமங்கலம் மக்களின் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட தமிழர்களின் எந்தத் துயரத்திலும் கண்ணீரிலும் பங்கேற்காத ஐயா ரஜினிகாந்த் அவர்கள், அறிக்கை விடுவதற்கும், போராடுவதற்கென்றும் ஒரு கூட்டம் இருக்கிறது என்று மக்களின் உரிமைக்காகப் பிரச்சினைக்காகப் போராடுபவர்களை அவமானப்படுத்துகிறார். போராட்டமே கூடாது என்கிற இவர் முதல்வரானால் தன்னுடைய உரிமைக்காகப் பிரச்சினைக்காகப் போராடும் மக்களை எப்படி எதிர்கொள்வார்..?
தமிழர்களின் வலியை காயத்தை உணராத ரஜினிகாந்த் எப்படித் தலைமையேற்றுத் தமிழர்களை வழிநடத்துவார்..?
என் மொழி அறியாதவன் இறைவனாக இருக்கமுடியாது!
என் வலி உணராதவன் தலைவனாக வரமுடியாது!
இவ்வாறு அவர் கூறினார்.


