2ஜி தீர்ப்பு – ஸ்டாலின், சு.சாமி ஆகியோர் சொல்வது என்ன?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“2ஜி வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தவறான புள்ளிவிவரங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2ஜி வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி.

திமுக எந்தத் தவறும் செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு போடப்பட்டபோது, திமுகவிற்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. ஊடகங்களும் இதைப் பெரிதாக வெளியிட்டன. தற்போது திமுக எந்தத் தவறும் செய்யவில்லை என்ற தீர்ப்பு வந்துள்ளது. இதையும் ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ எனக்கூறினார்.

2ஜி வழக்கு குறித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:

“அரசியல் காழ்புணர்ச்சியுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது. திமுக பற்றி தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. நீண்டகாலமாக நடந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது” எனக்கூறினார்.

2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்து, அரசு தன்னுடைய நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.முதலில் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலையான போதும் இப்படித்தான் கொண்டாடினார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் அதைத் திருப்பிப் போட்டது. அதுதான் இங்கேயும் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார் சுவாமி.

Leave a Response