தூக்கு, தண்டனையல்ல, திருப்பூர் தீர்ப்புக்கு மனித உரிமை செயற்பாட்டாளர் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததை பொறுக்காத கவுசல்யா குடும்பத்தார் கூலிப்படையை ஏவியதில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பல் சங்கரை வெட்டிக்கொலை செய்தது. அவரது மனைவி கவுசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

சங்கர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒன்றே முக்கால் ஆண்டுகள் நடந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 6 பேருக்கு தூக்குத்தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மூன்றுபேரை விடுதலை செய்தும், மீதியுள்ளவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கியது.

இத்தீர்ப்புக்குத் தமிழகமெங்கும் பலத்த வரவேற்பு.பெற்றோர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் பாராமல் கவுசல்யா இத்தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

இந்நிலையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கோ.சுகுமாரன், தூக்கு என்பது தண்டனையல்ல எனவே கடும்தண்டனை சரி தூக்கு சரியல்ல என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது….

உடுமலைப்பேட்டை சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை விதித்துள்ளது சரியென்றாலும்கூட மரண தண்டனையை ஏற்க முடியவில்லை.

மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். அதில் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், மரண தண்டனைக்கு எதிராக தீவிர இயக்கம் கண்ட தமிழகத்தில் இத்தீர்ப்பு ஏற்புடையதல்ல. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முதலில் 26 தமிழர்களுக்கும், பின்னர் 7 தமிழர்களுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராகப் போராடியவர்கள் எல்லாம் வெளிப்படையாக இத்தீர்ப்பை விமர்சனமின்றி ஆதரிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

ராஜீவ்காந்தி கொலையில் அவரோடு சேர்ந்துப் பலரும் கொல்லப்பட்டார்கள் என்று அன்றைக்குப் பார்த்திருந்தால், அவ்வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நாம் எதிர்த்திருக்க முடியாது.

தண்டனை, குற்றவாளிகளைத் திருத்தத்தானே ஒழிய பழிக்குப் பழி வாங்குவதல்ல. 1993ல் ஆந்திராவில் 23 பேர் எரிந்துக் கொன்ற சலபதி, விஜயவர்தன் என்ற இரண்டு தலித் இளைஞர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்ட போது ஆந்திர மக்கள் அனைவரும் அத்தீர்ப்பை ஆதரித்தனர். அப்போது மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பிய டாக்டர் பாலகோபால் அவர்களின் பணியை இப்போழுது நினைத்துப் பார்க்கிறேன்.

தலித்துகளைச் சாதி அடிப்படையில் வெறுப்பவர்கள் அனைவரும் தலித் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆதரித்தனர். இதன் பின்னால் சாதி வெறி இருந்தது. மனித உரிமை ஆர்வலர்களின் தொடர் முயற்சியால் இரு தலித்துகளின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

சாதி ஒழிய நெடிய போராட்டப் பயணம் தேவைப்படுகிறது. அது மனித மனத்தை மாற்றும் மகத்தான பணி. தற்போழுது மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சட்டப் பணிகள் மூலம் சங்கர் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தவிர்த்த கடும் தண்டனை கிடைக்க வழிவகை காணப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response