ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் சிங்களர்கள் நடத்திய தமிழினப்படுகொலை பற்றி எடுத்துரைத்து தமிழீழத்துக்கு ஆதரவாகப் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைத் தாக்க அங்கிருந்த சிங்களர்கள் முயற்சி செய்தனர்.
இதை மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, சீமான், திருமாவளவன், ஜி.கே.வாசன் உட்பட தமிழகமே கண்டித்தது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 27,2017) சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன் மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் ஏராளமானோர் இலங்கை துணைதூதரகத்தை முற்றுகையிட பேரணி சென்றனர். ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
தடையை மீறி இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாகச் சொல்லி, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது சிங்கள அதிபர் மைத்திரியின் உருவப்படத்தைச் செருப்பால் அடித்தும் தீயிட்டுக் கொளுத்தியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.