ஸ்படைர் மிக வக்கிரமான ஒரு திரைப்படம் – கொதிக்கும் சமூகச்செயற்பாட்டாளர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்குநடிகர் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள ஸ்பைடர் எனும் தெலுங்குப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. அப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் வெட்டியான் தொழில் செய்பவர் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதைக்கடுமையாகக் கண்டித்து, இதழியலாளரும் சமூகச் செயற்பாட்டாளாருமான கவிதாமுரளிதரன் எழுதியுள்ளார். அவர்,,,

இழிதொழில்கள் ஒழிப்பு இயக்கம் தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு தீவிரமாக இருந்தது என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.

மலம் அள்ளும் தொழில், சாவுகளுக்குப் பறை வாசிப்பது, வெட்டியான் தொழில் போன்ற பல தொழில்களுக்கு எதிராக இந்த இயக்கம் செயல்பட்டது என்று தோழர் மணிமாறன் ஒரு முறை சொன்னார்.

இன்று வெளியான ஸ்படைர் திரைப்படத்தில் வில்லனின் தந்தை வெட்டியான் வேலை செய்பவர். அதனாலேயே வில்லன் மனரீதியாக மற்றவர் அழுகையில் மகிழ்ச்சியடையும் ஒருவராக வளர்கிறார். அழுகை இல்லாத போது கொலைகள் செய்து அழுகையை உருவாக்குகிறார்.

வெட்டியான் வேலை செய்பவர்கள் பற்றி இப்படியொரு சமூக மனப்பதிவை (stigmatise/stereotype) உருவாக்கும் முதல் படம் அல்ல இது. பிதாமகனிலும் விக்ரமின் கதாப்பாத்திரத்தின் அப்நார்மல்தன்மை இந்த புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது.

நமக்கெல்லாம் நாம் இருக்கும் போது நமது கழிவுகளை அகற்றவும் இறந்த பிறகு நமது கழிவுகளை அகற்றவும் ஒரு சாதி தேவை. அவர்கள் எப்போதும் வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது. ஒன்று சாக வேண்டும் அல்லது கொல்ல வேண்டும்.

ஸ்படைர் மிக வக்கிரமான ஒரு திரைப்படம்.

படத்தின் இறுதியில் பக்கம் பக்கமாக மனிதாபிமானம் பற்றி வசனம் பேசுகிறார் ஹீரோ. அதை இயக்குநரிடமிருந்து தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response