ஈரோட்டில் 36 அடி உயர முருகன் சிலை

ஈரோட்டில் 32 அடி உயர மலேசிய முருகனுக்கு, பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு இடையே குடமுழுக்கு விழா  நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

ஈரோடு காசிபாளையம் மலைக்கோவிலில் பிரசித்திப்பெற்ற செல்வ விநாயகர், பாலமுருகன் கோவில் உள்ளது. மேலும் இதே கோவிலில் முனியப்பன் மற்றும் சப்தகன்னிமார் ஆகிய சாமிகளுக்கும் தனி தனி சன்னதிகள் உள்ளன. அதுமட்டுமின்றி கோவில் வளாகத்தில் பீடத்துடன் கூடிய 36 அடி உயர முருகன் கையில் வேலுடன் காட்சி அளிக்கும் சிலை அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. புதிய முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிந்தது.

இதனைத்தொடர்ந்து 36 அடி உயர முருகன், முனியப்பன் மற்றும் சப்தகன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜையும், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தது.

31-ந் தேதி காலை 9 மணிக்கு அங்குரார்பணம் மற்றும் ரக்சாபந்தன் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு பூதசுத்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தது. இரவு 8 மணிக்கு மகாபூர்ணாகுதி, அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 8.50 மணிக்கு கோ பூஜை மற்றும் நவதானிய ஹோமமும், மதியம் 12 மணிக்கு மந்திர ஸ்தாபனமும், அஷ்டபந்தனம் சாற்றுதலும், மாலை 5 மணிக்கு அஷ்வ பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நவம்பர் இரண்டு  காலை 6.30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பஞ்சகவ்யம், பிரம்மசுத்தி நிகழ்ச்சியும், 8.30 மணிக்கு பூர்ணாகுதி நிகழ்ச்சியும், 8.45 மணிக்கு கும்ப கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் 9.15 மணிக்கு முனியப்பன் மற்றும் சப்தகன்னிமார் கோவில் கும்பாபிஷேகமும், 9.45 மணிக்கு 36 அடி உயர முருகனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா,‘ என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து குடமுழுக்கைக் காணவந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மலர்கள் தூவப்பட்டன. பின்னர் விழாவில் கலந்து கொண்ட பக்தர் கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Response