டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது. இது கட்சியினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், கட்சிக்குள்ளேயும் அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாக கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், கட்சித்தலைமையை வெளிப்படையாக விமர்சித்தார்.
குமார் விஸ்வாசின் ஆதரவாளர் எனக் கருதப்படும் நீர்வளத்துறை அமைச்சர் கபில் மிஸ்ராவின், பதவி நேற்று முன்தினம் (மே 6) பறிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த கபில்மிஸ்ரா, ஆம் ஆத்மி தலைவர்கள் சிலரின் ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்துவேன் என அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று (மே 7) அவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
காலையில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
சுகாதாரம் மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியான சத்யேந்திர ஜெயின், அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து அவருக்கு ரூ.2 கோடி கொடுத்ததை எனது கண்ணால் பார்த்தேன். இது குறித்து கெஜ்ரிவாலிடம் கேட்டபோது, அரசியலில் சில விஷயங்கள் நடந்தது, அது குறித்து பிறகு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
ஆனால் கெஜ்ரிவாலின் உறவினர் ஒருவருக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள நில பேரத்தை முடித்துக்கொடுத்ததாக சத்யேந்திர ஜெயின் என்னிடம் தெரிவித்தார். இது குறித்து கெஜ்ரிவாலிடம் கேட்டபோது, அது பொய் என்று கூறியதுடன், என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறாயா? என்றும் என்னிடம் கேட்டார்.
ஒரு கேபினட் மந்திரியாக கடந்த 2 ஆண்டுகளாக நான் பார்த்த ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்து துணைநிலை கவர்னர் அனில் பைஜாலுக்கு அறிக்கை அளித்துள்ளேன். இவ்வாறு கட்சி தலைவர்களின் ஊழல் குறித்து அழுத்தம் கொடுத்ததாலேயே தற்போது நான் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளேன்.
ஆம் ஆத்மி எனது கட்சி. இந்த கட்சியில் இருந்து யாரும் என்னை வெளியேற்ற முடியாது. கட்சி மீது படிந்துள்ள ஊழல் கறைகளை நாங்கள் போக்குவோம். அதற்கான பணிகளை தொடங்கவே இங்கு (ராஜ்காட்) வந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடைய குற்றச்சாட்டு வெளியான உடனே, கபில் மிஸ்ராவின் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஊழல் தடுப்புப் பிரிவை கவர்னர் அனில் பைஜால் கேட்டுக்கொண்டார்.
இந்திய அளவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான தலைவர்களில் ஜெயலலிதா திடுமென மறைந்தார். அதைத்தொடர்ந்து அதிமுகவைச் சின்னாபின்னமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்காக வருமானவரித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
இப்போது தில்லியிலும் அந்த வேலையை பாஜக தொடங்கியிருக்கிறதென்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.
இங்கு ஜெ சமாதி போல அங்கு காந்தி சமாதி, இங்கு ஓ.பன்னீர்செல்வம் போல அங்கு கபில்மிஸ்ரா என்றும் சொல்கிறார்கள்.