முதல்வர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் – எடப்பாடி பேச்சால் அதிர்ந்த மோடி

மத்திய திட்டக் கமிஷனை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிதி ஆயோக் அமைப்பின் மூலம் தற்போது மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான, நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு வரலாறு காணாத கடும் வறட்சியை எதிர் நோக்குகின்றது. இதனால், இம்மாநில உழவர்கள் வேதனையில் உள்ளனர். உழவர்களின் பிரதிநிதிகள் டெல்லியில் கூட அவர்களுடைய குறைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். நியாயமான குறைகளுக்கு, இந்திய அரசு செவிசாய்க்க வேண்டியது அவசியமானது.

தமிழ்நாடு, பாசனம் மற்றும் குடிநீர் வழங்கலுக்கான நீர்த்தேவையை நிறைவு செய்வதற்கு, மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகளை, குறிப்பாக, காவிரி ஆற்றை சார்ந்துள்ளது. காவிரி நீர் விவகாரங்கள் தீர்ப்பாயத்தின் இறுதி ஆணையைச் செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீரை முறைப்படுத்தும் குழுவினை உடனடியாக அமைப்பதற்கான கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நம் நாட்டில் உள்ள நீர் வளங்களை சரியான மற்றும் சமமான முறையில் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்வதற்கான நீண்ட காலத் தீர்வு என்பது ஆறுகளை ஒன்றிணைப்பதேயாகும். மாநிலங்களுக்கு இடையேயான அனைத்து ஆறுகளும் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் நியாயமான மற்றும் முறையான கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இதன் மூலம், நாட்டின் நீர்வள ஆதாரங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் பாக் நீரிணைப்பு நெடுகிலும் உள்ள மீனவர்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். கடலை நம்பி வாழ்கிற இவர்களுடைய வாழ்வாதாரம் இலங்கை கடற்படையினரின் தீவிரமான நடவடிக்கைகளினால் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.

பாக் நீரிணைப்பில் உள்ள இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்.

இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 133 படகுகளை சீரமைக்கப்பட்ட நிலையில் உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசிடம் நான் ஆணித்தரமாக வலியுறுத்துகிறேன். இந்த நீண்டகால பிரச்சினைக்குரிய நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீட்பது தான். மீன்வளத்தை பல்திறப்படுத்துவதற்கான விரிவான தொகுப்பு உதவித் திட்டத்திற்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நான் வலியுறுத்துகிறேன்.

‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மாநிலத்தின் உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. தமிழகத்தில் நன்கு செயல்பட்டு வரும், தமிழ்நாடு அரசின் வெளிப்படையான மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை முறையின் மூலமாக பயனடைந்து வரும் தமிழ்நாடு மாணவர்களுக்கு, மாபெரும் அநீதி இழைப்பதாகவும் இது அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட தொழிற் பிரிவுகளில் சேர்க்கை நடைமுறையை முறைப்படுத்துவதற்காக 2005-ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கவனமான பரிசீலனைக்கு பின்னர் மாநிலத்திலுள்ள இளநிலை (தொழிற் கல்வி) பிரிவுகளில் 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி நிறுவனங்களின் சேர்க்கை சட்டத்தின் வாயிலாக நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்தது. இது அரசமைப்பு சட்டத்தின் 254 (2)-ம் பிரிவின் கீழ் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு வரையிலான சட்டப்பூர்வ சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகண்டுள்ளது.

தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை முறையானது குறிப்பாக, நலிவுற்ற பிரிவுகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களின் நலனை பாதுகாக்கிறது. ஏனெனில், அத்தகைய மாணவர்களால் பொதுநுழைவுத் தேர்வுகளில் நகர்ப்பகுதி உயர் பிரிவு மாணவர்களுடன் போட்டியிட இயலாது. பொது நுழைவுத் தேர்வை தடைசெய்யும் தமிழ்நாடு அரசின் முடிவினால் பெருவாரியான எண்ணிக்கையில், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய, தகுதிவாய்ந்த கிராமப்புற மாணவர்கள் பயன் பெற்றிருக்கின்றனர். பட்டமேற்படிப்பு சேர்க்கையைப் பொறுத்தவரையில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றி வருபவர்களுக்கு, தமிழ்நாடு அரசு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும், மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் பணியாற்றியவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது.

‘நீட்’ தேர்வினை அறிமுகம் செய்வது இத்தகைய கொள்கை முயற்சிகள் செயல்படுத்தப் படுவதை பயனில்லாமல் செய்வதுடன், மேற்கொண்டு மாநிலத்தின் சமூக பொருளாதார நோக்கங்களை வீணாக்கிவிடும். அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கான நடைமுறையில் உள்ள சேர்க்கை கொள்கையை பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு சட்டமன்றம் இரு சட்டமுன்வடிவுகளை அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றியது. இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 254 (2)-ம் ஷரத்தின் கீழ், ஜனாதிபதியின் அனுமதி வேண்டப்பட்டுள்ளது. மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், தற்போது நடைமுறையில் உள்ள நியாயமான மற்றும் வெளிப்படையான சேர்க்கை முறையை தொடர்வதற்கு ஏதுவாக இந்த இரு சட்ட முன்வடிவுகளுக்கு உடனடியாக ஏற்பளிக்குமாறு நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்தில் நிலவும் சூழலை கருத்திற்கொள்ளாமல், பொறியியல் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் உள்ளிட்ட ஏனைய தொழிற்படிப்புகளுக்கு, பொது நுழைவுத் தேர்வினையும் கட்டாயமாக்க வேண்டாம் என்றும் இந்திய அரசினை நான் வலியுறுத்துகிறேன்.

சில முக்கிய திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் குறைவாக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது, மாநிலங்களின் இடர்களை அதிகப்படுத்தி உள்ளது. குறிப்பாக, அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய இடைநிலை கல்வி இயக்கம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மெட்ரிக் படிப்பிற்கு கல்வி உதவித்தொகை திட்டம் போன்ற திட்டங்களின் பால் உங்கள் கவனத்தை நான் ஈர்க்க விழைகிறேன்.

சரக்கு மற்றும் சேவை வரியினை செயல்படுத்துவதனால் ஏற்படும் வருவாய் இழப்புகள், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நிதி ஆதாரங்களை பாதிக்கக்கூடும் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மாநிலங்கள், சரக்கு மற்றும் சேவை வரியினை செயல்படுத்துவதில் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பிற்கான கட்டாய இழப்பீட்டை தவிர, நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிதிப்பகிர்வாகவும், மத்திய அரசு திட்டங்களுக்கான மத்திய நிதி பங்கீடாகவும் நிதி பெறுகின்றன.

சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பிற்குள்ளாக மாநிலங்களின் இழப்பீட்டிற்கான நிதிகளின் அளவு, நிர்ணயிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக இருக்கக்கூடும். இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த நிதிகளின் பரிமாற்றத்தில் தொகையை குறைப்பது மாநிலங்களின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பதால், சரக்கு மற்றும் சேவை வரி செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும்போது, மத்திய அரசின் இதர நிதி பரிமாற்றங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிசெய்யப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

தேசிய வளர்ச்சி மையத்தைப்போன்று நிதி ஆயோக்கின் ஆளுமைக்குழு கூட்டங்களும் சம்பிரதாய நடவடிக்கைகளாக மாறவில்லை என்பதை உறுதிசெய்வதில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். பெயருக்காக கூட்டப்பட்டு, கருத்துகள் பெறப்பட்டு, ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்படாத கூட்டமாக இல்லாமல், அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும், விவாதிப்பதற்கும், புதிய கொள்கைகள், திட்டங்களை கொண்டு வருவதற்கும் மாநிலங்களை அழைப்பதற்கான ஒரு மன்றமாக இது இருக்க வேண்டும். முதல்- அமைச்சர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

இந்த பெருமை வாய்ந்த குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் கருத்துக்களை நான் முன்வைத்துள்ளேன். எங்கள் கருத்துகளுக்கு உரிய மதிப்பளித்து, நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளில், மாநிலங்களும் தங்களது முழு பங்களிப்பை நல்க வழிவகை செய்து, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து, நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இந்த முயற்சி உதவும் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசியலில் கடும் நெருக்கடிகளை மோடி அரசு ஏற்படுத்திவருகிறது. அதிமுக ஆட்சி நீடிக்குமா? என்கிற கேள்வியை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியிருக்கிற நெருக்கடியான நேரத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,
தமிழகமுதல்வர் மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசுவார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவர், தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கை, நீட் தேர்வு தொடர்பாக போராடும் தமிழக மாணவர்கள் கோரிக்கை ஆகியனவற்றை வலியுறுத்திப் பேசியதோடு எங்களைக் கூப்பிட்டு கருத்துகளைக் கேட்டு விட்டு சும்மாயிருந்துவிடாதீர்கள் முதல்வர்கள் கருத்துக்கு முக்கியத்துவக் கொடுங்கள் என்று பேசியிருப்பதும் அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததும் பாஜக அரசை அதிரவைத்துள்ளது என்று தில்லியில் பேச்சு.

Leave a Response