
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாக்கு திருட்டு குறித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தியின் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தார். அப்போது இருவருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசினார் இராகுல் காந்தி.அப்போது அவர் கூறியதாவது….
காரசாரமாக நடந்த அந்த விவாதத்தில் அமித் ஷா தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது கைகள் நடுங்கின. இதையெல்லாம் நீங்களும் பார்த்திருப்பீர்கள். அவர் மனதளவில் அழுத்தத்தில் இருந்தார். அது நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டது. அதை முழு நாடும் பார்த்தது.
நான் கூறிய விசயங்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை, எந்த ஆதாரத்தையும் அவர் கொடுக்கவில்லை. அதுபற்றி நாங்கள் செய்தியாளர் சந்திப்பின்போது பகிரங்கமாகக் கூறினோம். எனது செய்தியாளர் சந்திப்புகளை நாடாளுமன்றத்தில் விவாதிப்போம் என்று அவருக்கு நேரடியாக சவால் விடுத்தேன். பதில் கிடைக்கவில்லை. உண்மை என்ன என்பது உங்களுக்குத் (பத்திரிகையாளர்களுக்கு) தெரியும்.
அவரது உரை முழுக்க முழுக்க தற்காப்புக்கான ஒரு முயற்சியே அன்றி வேறில்லை. வாக்குத் திருட்டு என்பது மிகப்பெரிய தேசத் துரோகம். வெளிப்படையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தலைமை தேர்தல் ஆணையருக்கு கூடுதல் சட்டப் பாதுகாப்பு வழங்குவது ஆகிய முக்கிய விசயங்கள் குரித்து நான் எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் அமித் ஷா பதில் அளிக்கவில்லை
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


