எஸ் ஐ ஆர் பணிச்சுமையால் 28 பேர் மரணம் – மேற்குவங்க அதிர்ச்சி

தமிழ்நாட்டைப் போல் மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அந்தப் பணிச் சுமையால் மன அழுத்தமடைந்த வாக்காளர் நிலை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ரங்கமதி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூத்தின் பிஎல்ஓ 48 வயதான சாந்திமுனி ஓராவ் தனது வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அங்கன்வாடி பணியாளரான அவர் எஸ்ஐஆர் பணி தொடங்கியதில் இருந்து கடுமையான பணிச்சுமையால் அவதிப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர். இந்த மன உளைச்சல் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சமூகவலைதளப் பதிவில்…

மற்றொரு பிஎல்ஓ மரணத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன். எஸ்ஐஆர் செயல்முறை தொடங்கியதில் இருந்து 28 பேர் இறந்துள்ளனர். இதற்குமுன் 3 ஆண்டுகள் நடந்த இப்பணியை அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க தேர்தல் ஆணையம் 2 மாதத்திற்குள் முடிக்க கட்டாயப்படுத்துகிறது. இதனால் பிஎல்ஓ போன்ற களப்பணியாளர்களுக்கு மனிதாபிமானமற்ற அழுத்தம் தரப்படுகிறது. இடைவிடாத பணிச்சுமையால் அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகின்றன. உயிர்களைக் காக்க உடனடியாக எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response