
2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில்,அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தன்னை அதிமுக உறுப்பினர் எனக் கூறியிருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில், சூரியமூர்த்தி, அதிமுக உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பினராக இல்லாத சூரியமூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்தும் கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன்…
கட்சி விதிப்படி பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனத் தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக் கூறினார்.அதோடு, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
இது அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிச்சாமிக்குப் பெரும் பின்னடைவு என்று சொல்லப்படுகிறது.


