
அதிமுக சிறுபான்மைப் பிரிவு இணைச்செயலாளராகவும், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் கோவையைச் சேர்ந்த அப்துல் ஜப்பார்.
இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற மே தின விழாப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது,
நான் ஒரு இஸ்லாமியன். ஆனாலும் இந்தத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறினேன்.
காரணம் முஸ்லிம்கள் அதிமுகவிற்கு ஓட்டுப்போடமாட்டார்கள். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பாஜகவோடு இல்லை. நம்முடன் ஒரு முஸ்லிம் கட்சி இருந்தது. ஆனால் அந்தக்கட்சியும் சேர்ந்து திமுகவிற்கு ஓட்டு அளித்தது. அதனால் நாம் ஏன் பாஜகவை பகைக்க வேண்டும்? என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் எடுத்துச் சொன்னேன் என்று பேசினார்.
அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத்தின் ஆட்சி மன்றக் குழு அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஐக்கிய ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அப்துல் ஜப்பார் நீக்கப்பட்டுள்ளார். அப்துல் ஜப்பாரின் பேச்சுக்கும், ஐக்கிய ஜமாஅத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும், அவரது பேச்சுக்கு ஐக்கிய ஜமாஅத் உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்ததால் அவரைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளதாகவும் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தெரிவித்துள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அப்படி அமைய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியவர் செங்கோட்டையன்.அவர் எண்ணப்படி நடந்துவிட்டதால் இப்போது அமைதியாக இருக்கிறார்.அவருடைய தலைமையிலான கூட்டம் என்பதால் அவருடைய கருத்தை வலியுறுத்தும் விதமாக,
ஆர்வக்கோளாறு அரசியல் பேசிவிட்டார் அப்துல் ஜப்பார்.அதனால் ஐக்கிய ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் என்கிற முக்கியப் பொறுப்பை இழந்துவிட்டார் என்று அவரைச் சார்ந்தோர் கூறுகின்றனர்.


