நிர்மலாதேவி விவகாரம் – கைதான முருகன் மனைவி வெளியிடும் திடுக் தகவல்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் நியமித்த ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சந்தானமும், சி.பி.சி.ஐ.டி.காவல்துறையினரும் அவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி முடித்து விட்டனர்.

இந்த விவகாரத்தில் நிர்மலாதேவிக்கு நெருக்கமாக இருந்த பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி, இருவரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

இருவரின் காவலும் முடிந்து நாளை (திங்கட்கிழமை) இருவரும் சாத்தூர் 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
நேர்நிறுத்தப்பட உள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. காவலில் உள்ள பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா நேற்று மதுரை அரசு சுற்றுலா மாளிகையில், விசாரணை அதிகாரி சந்தானத்தை சந்தித்து, ஒரு மனு கொடுத்தார்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. என்னுடைய தாயார் பாக்கியம், தந்தை துரைசாமி, என் கணவரின் சகோதரி சுவிதா ஆகியோருடன் விசாரணை அதிகாரியைச் சந்தித்து மனு அளித்திருக்கிறேன்.

என் கணவர் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தமட்டில் பேராசிரியராக கீழ்நிலை பதவி வகிப்பதால், உயர் அதிகாரிகள் அவரைப் பலிகடா ஆக்க முயற்சிக்கிறார்கள். பேராசிரியை நிர்மலாதேவி புத்தாக்கப் பயிற்சிக்கு வந்தபோது அவருக்கு அறை ஒதுக்கப்படாததால், என் கணவருக்கு ஏற்கனவே அறிமுகமான கருப்பசாமியுடன் வந்து புத்தாக்கப் பயிற்சிக்காக அறை ஒதுக்கீடு செய்யக் கோரியுள்ளார்.

கருப்பசாமி, என் கணவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். என் கணவர் இருசக்கர வாகனம் பயன்படுத்தாத நிலையில், அவ்வப்போது என் கணவரை கருப்பசாமி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் அவர் என் கணவருக்கு அறிமுகமானார்.

நிர்மலாதேவிக்குக் கிடைத்த அறையில் தண்ணீர் வசதி இல்லாததால் அவருக்கு குளிர்சாதன அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையை அவருக்கு ஒதுக்கித் தந்தவர் யார் என்பதைக் கண்டறிய வேண்டும்.

நிர்மலாதேவி புத்தாக்கப் பயிற்சியின்போது கல்லூரி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்ததால் அவரைப் பயிற்சியில் இருந்து விடுவிக்கக்கோரி, கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டபோது, அவரை விடுவிக்க இயலாது என்று கல்லூரி நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியது யார் என்றும் விசாரிக்கப்பட வேண்டும்.

நிர்மலாதேவி பல்கலைக்கழக வளாகத்தில் ஆளுநர் கலந்து கொண்ட ஒரு விழாவில் மேடையில் இருப்பதுபோல் படங்கள் வெளியாகி உள்ளது பற்றி நிர்மலாதேவியே தனது ஆடியோவில் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு பின், அந்தப் படம் பல்கலைக்கழக ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் என்ன?

நிர்மலாதேவியை ஆளுநர் கலந்து கொண்ட விழா மேடையில் அனுமதிக்கக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

இந்த பிரச்சினையை தொடர்ந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிலர் என் கணவரிடம் வந்து நீங்கள் வீட்டைப் பூட்டி விட்டு தலைமறைவாகி விடுங்கள். இல்லை என்றால் உங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவார்கள் என்று பயமுறுத்தினர். இதற்குக் காரணமானவர்கள் யார் என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.

நிர்மலாதேவி புத்தாக்கப் பயிற்சியின்போது அவர் தங்கி இருந்த அறைக்கு அடிக்கடி சென்று வந்த உயர் அதிகாரி யார் என்பது பற்றி விசாரிக்க வேண்டும்.

என் கணவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என்று பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் சில உயரதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் வற்புறுத்தினர். ஆனால் நாங்கள் தான் அவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறினோம். அதன் பேரில் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

விசாரணை அதிகாரி சந்தானம், பல்கலைக்கழக வளாகத்தில் விசாரணை நடத்தியபோது, பேராசிரியர் முருகனை எங்கே என்று கேட்டுள்ளார். இதற்கு அவர் தினசரி கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்று விடுவார் என்று அங்குள்ள சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு கூறியது யார் என்பதையும் விசாரிக்க வேண்டும்.

விசாரணை அதிகாரி சந்தானம், நான் மனு கொடுக்கச் சென்றபோது, இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேட்டார். நான் விவரங்களை அவரிடம் கூறி இருக்கிறேன்.

என் வீட்டிற்கு சி.பி.சி.ஐ.டி.காவல்துறையினர் சோதனைக்கு வந்தபோது, அவர்களிடம் இந்த விவரங்களை தெரிவிக்கவில்லை. சோதனைக்கு வந்த அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து, எங்களுக்குத் தைரியம் கூறினர். எனவே இந்த பிரச்சினையில் எவ்வித தொடர்பும் இல்லாத என் கணவர் பலிகடா ஆக்கப்படக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response