பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்னொரு கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தவறாக வழிகாட்டியதாக துணை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் கைதான நிர்மலா தேவியை இந்த விவகாரம் தொடர்பாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக தலைமறைவாகி இருந்தனர்.பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமியை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், பேராசிரியர் முருகன் இன்று (திங்கள்கிழமை) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை சந்திக்க வருவதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பல்கலைக்கழகத்திற்கு விரைந்த சிபிசிஐடி போலீஸார் துணைவேந்தர் அறையில் காத்திருந்த பேராசிரியர் முருகனை பிடித்தனர். பின்னர் அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ துறை துணை பேராசிரியராக முருகன் பணியாற்றி வருகிறார்.

இவர் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். பேராசிரியர் முருகன் சிக்கிய நிலையில், தலைமறைவாகியுள்ள கருப்பசாமியை பிடிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நிர்மலாதேவி வழக்கில் இரண்டாவது கைது இது. இன்னும் கைதுகள் தொடரும் என்கிறார்கள்.

Leave a Response