நவீன உலகுக்கான தமிழை அறிமுகப்படுத்திய தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி மறைந்தார்

தமிழறிஞரும் அறிவியலரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர். வா.செ.குழந்தைசாமி இன்று மறைந்தார்.

வா. செ. குழந்தைசாமி (சூலை 14, 1929 – திசம்பர் 10, 2016) இந்திய பொறியியல் (நீரியல்துறை) அறிஞரும், கல்வியாளரும் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றியவர். கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர்.

கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆய்விற்காக இல்லினாயிசு பல்கலைக்கழகத்திடமிருந்து நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை இலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

இவர் உலக அளவில் நீர்வளத்துறையில் பல குறிப்பிடத்தக்க பதவிகள் வகித்துள்ளார். பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் பங்கேற்றுள்ளார். பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில் பல கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவைதவிர ஆங்கிலத்திலும், தமிழிலும், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவர் தனது ஆறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஏழு கட்டுரைகளுக்காக 1999-ம் ஆண்டு தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியோடு சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளைப் பாராட்டி சாகித்ய அகாடமி விருது வழங்கியுள்ளது. மேலும், கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் இவரது பங்களிப்பிற்காக பத்மசிறீ விருது 1992-ம் ஆண்டும், பத்மபூசன் விருது 2002-ம் ஆண்டும் வழங்கப்பட்டது. இவரது தமிழ்ப் படைப்புகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு 1980-ம் ஆண்டு கௌரவ முனைவர் பட்டமளித்தது.

அவருடைய மறைவையொட்டி ஆழிசெந்தில்நாதன் எழுதியுள்ள இரங்கல் குறிப்பில்….

தமிழறிஞரும் அறிவியலரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முனனாள் துணைவேந்தருமான பேரா. வா.செ.குழந்தைசாமி மறைந்தார். அவர் நினைவைப் போற்றுவோம்.

வா.செ.கு (VCK என்றும் தமிழரால் அழைக்கப்படுபவர்) என் இளம் வயதில் என் மீது மிகப்பெரிய அளவுக்கு தாக்கம் செலுத்தியவர்களில் ஒருவர். அவருடைய அறிவியல் தமிழ் என்கிற நூலை நான் பன்னிரெண்டாவது படிக்கும்போது வாசித்தேன். இன்று நான் மொழிபெயர்ப்புத்துறையிலும் மொழித்துறையிலும் கணித்தமிழ்த் துறையிலும் இருப்பதற்கும் மொழி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபவதற்கும் காரணமான பல்வேறு அம்சங்களில் வா.செ.குவின் அந்த நூலும் ஒன்று என்பதை நான் உறுதியாகக் கூறமுடியும்.

பெரும்பாலான தமிழறிஞர்களின் நூல்கள் பழமையில் தோய்ந்திருக்க, வா.செ.கு. நவீன உலகத்துக்கான தமிழை அதில் அறிமுகப்படுத்தியிருந்தார். அப்போது எனது மானசீக அலமாரியில் பாவாணரும் பெருந்ஞ்சித்திரனாரும் இருந்த அதே வேளை வா.செ.குவும் மணவை முஸ்தபாவும்கூட இருந்தார்கள்.

தமிழ் வளர்ச்சிக்கான வா.செ.குவின் முன்வைப்புகளில் பலவற்றைக் காலப்போக்கில் நான் கைவிட்டுவிட்டேன் என்றாலும் (குறிப்பாக எழுத்துச் சீர்த்திருத்தம்) மொழியை அறிவியல் நோக்கில் பார்ப்பதற்கான அவரது பல ஆலோசனைகள் மிகவும் சிறந்தவை. அதில் அவர் பாரதிதாசன் பரம்பரை.

1997-98 இல், நான் இந்தியா டுடேயில் பணியாற்றி போது, அவரது வேறு ஒரு நூலுக்கான விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தேன். எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றிய அவரது கருத்து குறித்து நான் மாறுபட்ட கருத்தை அதில் பதிவுசெய்திருந்தேன். குறிப்பாக வரிவடிவத்தை எளிமைப்படுத்துவது, கருவிகளுக்கு ஏற்ப எழுத்து வடிவங்களை மாற்றுவது போன்றவை தேவை இல்லாதது என்றும், ஒருவேளை தேவைப்படுவது என்று ஏதேனும் இருந்தால், அது ஒலிபெயர்ப்புக்காக சில புதிய எழுத்துக்களை கூடுதல் எழுத்துவரிசையாக சேர்க்கலாம் என்பது என்னுடைய வாதமாக இருந்தது. நூல் விமர்சனத்தைப் படித்துவிட்டு வா.செ.கு, எங்கள் ஆசிரியர் வாசந்தி அவர்களை அழைத்துப் பேசியிருக்கிறார். என்னை யார் என்று விசாரித்திருக்கிறார். அதன் பிறகு அவரோடு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. பல தமிழாசான்களைப் போல அவர் என்மீது கோபப்படவில்லை.

பின்பு 1998-2004 வாக்கில் தமிழ் இணைய செயல்பாடுகளினபோது அவரை அடிக்கடி சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
மொழி வளர்ச்சி குறித்தும் ஏற்கவும் விமர்சிக்கவும் மறுக்கவுமான பல கருத்துகள் அவரிடம் இருந்தன. ஆனால் தமது உலகளாவிய அனுபவங்களினூடக அவர் முன்வைத்த கருத்துகளின் உள்நோக்கம் தமிழ் வளர்ச்சிக்கானதுதான் என்பதே என் கருத்து.
அவருடைய “குலோத்துங்கன் கவிதைகளைக்” கண்டு அரண்டுபோனதைத் தவிர, எப்போதுமே அவர் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு..
பேராசிரியரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response