பெரியார் பல்கலைக்கு ஊழலற்ற புதிய துணைவேந்தர் – கொளத்தூர் மணி கோரிக்கை

தமிழ்நாடு ஆளுநர் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்….

சேலம் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் பதவிக் காலம் ஜூன் மாதம் 30 தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் அவர் தனக்கு மீண்டும் பணி நீடிப்பு‌ப் பெற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

தனியார் நிறுவனத்தை‌ பல்கலையில் துவங்கியது‌, பட்டியலின‌‌ மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையை‌ பின்பற்றாதது‌, தமிழ்நாடு அரசு பதிவாளரைப் பணி இடை நீக்கம் செய்யுமாறு அனுப்பிய கடிதத்திற்கு‌ மதிப்பு அளிக்காமல்‌ பதிவாளரைப் பணியில் இருந்து விடுவித்தது‌, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது‌‌ போன்ற‌ குற்றச்சாட்டுகள் ‌இவர்‌ மீது உள்ளன.

மேலும் ஊழல்‌ தொடர்பாக‌ கைது நடவடிக்கையையும் எடுத்து உள்ள நிலையில் அவருக்கு‌ப் பணி நீட்டிப்பு வழங்க முடிவு செய்வது கண்டனத்திற்குரியது. மேலும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு புகார் மனுக்களை‌ அளித்து உள்ளன.

ஆகவே, தமிழ்நாடு அரசு இம்மாத இறுதிக்குள் துணைவேந்தர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநர் துணை வேந்தர் மீது‌ நடவடிக்கை எடுக்க தமிழ்நாட்டரசுக்கு உடனடியாக அனுமதி அளிக்க‌ வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டில்‌ சிக்கி உள்ள துணை வேந்தருக்குப் பணி‌ நீட்டிப்பும் வழங்கக்‌ கூடாது.

விரைவில் ஒரு நல்ல ஊழலற்ற துணை வேந்தரை‌ உடனடியாக‌ நியமிக்க வேண்டும்.

இது தொடர்பாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் ஆளுநருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும்‌‌ அளித்துள்ள புகார்கள் மீது‌ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response