தொகுதி மறுசீரமைப்பில் பாஜகவின் இரகசியத்திட்டம் – அம்பலப்படுத்தும் பாமஉ

இந்திய ஒன்றியத்தில் பாராளுமன்றத் தொகுதிகளை மறு வரையறை செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணியில் மிகப் பெரிய சதித்திட்டம் இருப்பதாக சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி கூறியுள்ளார்.

இதுகுறித்து பிப்ரவரி 26 அன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

ஒன்றிய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அபாய மணியை ஒலிக்கவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மறுவரையறை செய்யும் போது, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் அதிக பாதிப்பைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது.

1976 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்கு அப்போது எதிர்ப்பு கிளம்பியதால், அக்கொள்கையை 25 ஆண்டுக்கு ஒத்திவைத்தனர். இதேபோல 2002 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது, அப்போதைய பிரதமர் அடுத்த 25 ஆண்டுக்கு மறுவரையறை செய்யக் கூடாது என திருத்தம் கொண்டு வந்தார்.

தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது தமிழ்நாட்டுக்கான 39 தொகுதிகள் 31 தொகுதிகளாகக் குறைந்து விடும். தென்மாநிலங்களில் உள்ள 139 தொகுதிகள் 103 தொகுதிகளாகக் குறையும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதற்காக மக்களவைத் தொகுதிகளை குறைத்து தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தண்டனை தரக்கூடாது.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப்பிரதேசம், பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களுக்கு கூடுதல் பாமஉக்கள் கிடைப்பதை எப்படி ஏற்க முடியும்?

பாஜக-வைப் பொறுத்தவரை எதையும் வெளிப்படையாக அறிவித்து முறையாகச் செய்வதில்லை. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை ஒரே இரவில் யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து விட்டனர்.

இதேபோன்று தான், வக்பு வாரியம், ஒரே நாடு, ஒரே தேர்தல், மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை என எல்லா விவகாரங்களிலும் ஒரு குறிப்பிட்ட அஜெண்டாவை வைத்துக் கொண்டே பாஜக அரசு செயல்படுகிறது.

தற்போதைய மக்களவைத் தொகுதிகளான 543 தொகுதிகளை அப்படியே வைத்துக் கொண்டு, கூடுதலாக தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் அறிவிக்கப் போகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
ஒட்டுமொத்தத் தொகுதிகள் 848 ஆக அதிகரித்தாலும், தமிழ்நாட்டுக்கு எந்தப் பலனும் இல்லை. தென் மாநிலங்களில் வெறும் 34 தொகுதிகள் தான் அதிகரிக்கும். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் 200 தொகுதிகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பாஜக வீழ்ச்சிக்கு தமிழ்நாடு காரணமாக இருக்கிறது என்பதால் குறிவைத்து செயல்படுகிறார்கள்.

இதனால், இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜக கட்சி கவனம் செலுத்தினாலே ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்து விட முடியும்.மீதமுள்ள மாநிலங்களில் அவர்கள் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காவிட்டாலும் அவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.

தேசிய மக்கள் தொகை சராசரியை விட, தமிழ்நாட்டில் மக்கள் தொகை சராசரி குறைவாக இருக்கிறது. 2050 இல் எட்ட வேண்டிய இலக்கை இப்போதே எட்டிவிட்டோம். முறையாக வரி செலுத்துவோருக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்கிறது.

மாநில உரிமைகளைக் காப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாடு பலவழிகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நிதிநிலை அறிக்கை, நீட் தேர்வு, ரயில்வே திட்டங்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு அறிக்கை என பல வழிகளிலும் நம்மை வஞ்சிக்கிறார்கள்.

2035 இல் எட்ட வேண்டிய உயர்கல்வி இலக்கை தற்போதே எட்டிவிட்ட தமிழ்நாட்டுக்கு புதிய கல்விக் கொள்கை தேவையில்லை.

முதலமைச்சருக்குத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து சொன்னது யார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுள்ளார்.பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான் தொகுதி மறுவரையறை குறித்து கூறியவர்கள். அவர்களிடமே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். பிறரை குறை சொல்லாமல் முழுமையாக படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் இதுபோல பேசக்கூடாது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டங்களில் அதிமுக ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இது அங்குள்ள குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது.அங்கு ஒன்று பேசிவிட்டு இங்கு ஒன்று பேசுவது என அதிமுக இரட்டை நிலைப்பாட்டுடன் உள்ளது.

நடிகர் விஜய் எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கக் கூடாது. மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் போது அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றாக நின்று தடுக்க வேண்டும். தார்மீகக் கடமைகளை இழந்து விடாமல் கூட்டாட்சித் தத்துவத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response