பெரியார் பல்கலைக்கழகத்தில் சனாதனம் – கொளத்தூர் மணி கண்டனம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சங்கிகளின் பிடியில் இருக்கிற துணைவேந்தரின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அதில் புதிதாக ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற ஒரு நிகழ்ச்சி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகப் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை தமிழக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு எதிரானது. தமிழக உயர் கல்வித் துறை வழிகாட்டலில் கீழ் தான் பல்கலை செயல்பட வேண்டும். ஆனால்‌ மத்திய அரசின் திட்டத்தினை புகுத்துவது போல் இந்த சுற்றறிக்கை உள்ளது. இந்தியா – பாரதம் என்ற சர்ச்சை ஓய்வதற்குள் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவது தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிரானது ஆகும். தமிழக அரசின் கொள்கை கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டிய பல்கலைக் கழகம் இவ்வாறு சனாதனத்தைத் திணிப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த செயல்பாடுகளை தமிழ்நாடு அரசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் கண்காணித்து இதனைத் தடுப்பதற்கும், மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கொளத்தூர் தா செ மணி
தலைவர்
திராவிடர் விடுதலைக் கழகம்
27 10 2023

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response