அதிமுக தலைமையை டெல்லியும் தீர்மானிக்க வேண்டாம், மன்னார்குடியும் தீர்மானிக்க வேண்டாம் – கவிதாபாரதி ஆவேசம்

அதிமுகவில் தற்போது நடக்கும் அதிகாரப்போட்டியில் நுழைந்து குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது பாஜக. அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் கவிதாபாரதி புதிய கருத்தொன்றைச் சொல்கிறார். அதில்,,,

அ.தி.மு.க.வின்
உண்மையான தொண்டர்களுக்கு
ஒரு அறைகூவல்..
எம்.ஜி.ஆர் அவர்கள் கட்சி நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றிலிருந்து தனது குடும்பத்தை மிகத்தெளிவாக பிரித்து வைத்திருந்தார்..
எதேனும் பதவி தருமாறு கோரியதற்காக அவரது ஆருயிர் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியை பல காலம் விலக்கி வைத்திருந்ததாகக் கூறுவார்கள்.. கடைசி வரைக்குக்கும் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..
எம்.ஜி.ஆர் வீட்டு வாரிசுகள் யாரும் முன்வாசல் வழியாக வீட்டுக்குள் வரக்கூடாது என்பது எம்.ஜி.ஆரின் கடுமையான உத்தரவு என்று எம்.ஜ்.ஆர் குடும்பத்தைச் சேர்ந்த திரு.விஜயன் என்னிடம் கூறியிருக்கிறார்..
கட்சி நிர்வாகிகள், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் போன்றவர்களோடு தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பழகக்கூடாது, அந்தப் பழக்கத்தைத் தவறாகப் பய்ன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் இப்படியோரு கட்டுப்பாடு..
தன்னுடைய இறுதிக்காலத்தில்கூட தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஆணையிட்டார்.. இது அரசு விளம்பரமாகவும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது..
அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சிக்குத் தலைவராகவும், அந்தக் கட்சியின் சார்பாக முதல்வர் பதவிக்கும் யார் வாரிசு என்று விவாதம் நடக்கிறது..
ஒரு புறம் சசிகலா தன் குடும்ப வாரிசுகளை பதவிக்குக் கொண்டு வரும் சாத்தியக்கூறுகள் வெளிப்படையானவை..
மறுபுறத்தில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் தீபாவை கட்சித்தலைவராகவும், முதல்வராகவும் நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஒரு வகுப்பினர் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்..
ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குத்தான் நேரடி வாரிசில்லை.. அதற்கு சசிகலாவும், அவரது கும்பத்தினரும் வாரிசா அல்லது அம்மாவின் ரத்த உறவான அண்ணன் மகள் தீபா, மகன் தீபக்கா என்பதெல்லாம் அவர்களின் சொந்தப் பிரச்னை..
இதற்கு இருதரப்பாரும், அவர்களுடைய ஆதரவாளர்களும் நேரடியாகப் பேசி சுமூகத் தீர்வை எட்டலாம், அல்லது சட்டத்தின் உதவியை நாடலாம் அல்லது பலப்பிரயோகம் செய்து மோதிக்கொண்டு தண்டனை அனுபவிக்கலாம்..
இது அவர்களின் சொந்தப்பிரச்னையே தவிர தேசப்பிரச்னை அல்ல.. தார்மீகரீதியாக மற்றவர்கள் இதில் தங்கள் கருத்தைச் சொல்லலாம்.. தலையிட முடியாது
ஆனால் அண்ணா தி.மு.க என்னும் கட்சி வாரிசில்லாமல் அநாதையாகிவிடவில்லை.. அது ஒரு கம்பெனியல்ல.. அதற்கு வாரிசு யாரென்று யாரும் உயில் எழுதவும் முடியாது.. யாரும் வாரிசென்று சொந்தம் கொண்டாடவும் முடியாது..
அக்கட்சி ஒரு ஜனநாயக அமைப்பு.. யாருடைய தனிச்சொத்துமன்று.. கட்சியின் அமைப்பு விதிகளின்படி தகுதியடைய ஒவ்வொரு உறுப்பினரும் கட்சிப்பொறுப்புக்கோ, முதல்வர் பதவிக்கோ தகுதியானவர்தான்.. வாரிசுதான்
சசிகலா தன் குடும்ப உறுப்பினர்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி பொறுப்புகளுக்குக் கொண்டு வந்தால் அது அராஜகம், உறுப்பினர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அவமானம்
கட்சியில் உறுப்பினரே இல்லாத தீபாவை ஜெயலலிதாவின் சொந்தம் என்பதால் தலைவராக்க வேண்டுமென்பதும், முதல்வராக்க வேண்டுமென்பதும் அராஜகந்தான், அநீதிதான், அவமானந்தான்..
ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்குமான நட்பில், நம்பிக்கைத் துரோகம் ஆயிரம் நடந்திருக்கலாம்.. நடந்திருக்கிறது.. ஜெயலலிதா விசுவாசிகள் பலரை சசிகலா நேர்ம் பார்த்து அதே ஜெயலலிதா மூலமாகவே கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்..
ஆனால் ஜெ. தனது அண்ணன் குடும்பத்தோடு நெருங்கிய உறவில் இருந்தார் என்பதற்கோ, அதை சசிகலாதான் பிரித்து வைத்தார் என்பதற்கோ சான்றுகள் எதுவுமில்லை.. அதுபோலவே தன் அண்ணன் குடும்பத்திற்கு பதவி வழங்க வேண்டும் என்று அம்மா நினைத்ததுமில்லை, அதை சசிகலா கெடுக்கவுமில்லை..
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து அவருடன் நின்ற பல பேர் சசிகலாவின் அதிகாரத்தைப் பொறுக்க முடியாமல் வெளியேறியிருக்கிறார்கள்.. வெளியேற்றப்பட்டுமிருக்கிறார்கள்..
செங்கோட்டையன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், மதுசூதனன், சைதை துரைசாமி போன்ற சிலர் இதே கட்சிக்குள் அதிகாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்..
முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசு போன்றவர்களெல்லாம் சூழ்நிலை காரணமாக வேறு கட்சிகளில் இருக்கிறார்கள்..
பிதாமகர் ஆர்.எம்.வீயும் இருக்கிறார்..
இந்த இக்கட்டான சூழலில் மீண்டும் இந்த பழைய கட்சிக்காரர்கள் ஒன்றிணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும்.. இவர்களின் ஆலோசனைப்படி கட்சியின் பொதுக்குழுவில் ஜனநாயக முறைப்படி கட்சிப்பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.. இதேபோல் ஆட்சி நிர்வாகத்துக்குத் தகுதியானவர்களையும் தேர்ந்தெடுக்கலாம்..
கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் யாரையும் கட்சி விசுவாசிகள் ஒன்றுகூடி நிராகரிக்கலாம்..
இதற்கு தங்கள் ஊர், ஜாதி, சுயநலம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாசத்தை மட்டும் மனதில் இறுத்தி உண்மையான கட்சி விசுவாசிகள் ஒன்றிணைய வேண்டும்..
யாரோ ஒரு குடும்பத்தின் சுய லாபத்திற்காக மத்திய அரசின் காலடியில் கட்சியை அடகு வைப்பது எம்.ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கேவலம்..
வெங்கய்யா நாயுடு வந்து கட்சியை நடத்துவதற்கு, கட்சியை வைத்து சம்பாதிப்பவர்கள் கைகட்டி நிற்கலாம்.. தொண்டனுக்கு அது அவமானமில்லையா..
தலைவியின் கடைசிகாலம் சந்தேகத்திற்கிடமானது என்பது தெரிந்த பிறகும் அதற்குக் காரணமானவர்களே இன்னும் கட்சியை நடத்துவதை அனுமதிப்பது முதுகெலும்பற்றதில்லையா..
யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம் என்பதுதான் இந்த இயக்கத்தின் பெருமைக்குரிய வரலாறு… அதேபோல் கட்சிக்குத் தலைவராக இந்தக்குடும்ப வாரிசும் வேண்டாம், அந்தக்குடும்ப வாரிசும் வேண்டாம்.. தலைவரும், அம்மாவும் அப்படியான வழிமுறையைக் காட்டவில்லை..
கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள், உழைப்பவர்கள் வரட்டும்..
மீண்டும் சொல்கிறேன்.. அம்மாவின் சொத்துக்கு யார் வாரிசென்பது மக்களுக்குத் தேவையில்லை..
ஆனால் கட்சிப் பொறுப்புக்கு தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டனும் முன்வரவேண்டும்.. இதுவே எம்.ஜி.ஆருக்கும்,. அம்மாவுக்கும் அவர்கள் காட்டும் விசுவாசமாகும்..
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய நாளிலிருந்து
தன் கடைசிக்காலம் வரை எந்தப் பதவியிலும் இல்லாமல் என் அப்பா சொந்தக் காசைச் செலவழித்து எம்.ஜிஆர் ரசிகனாக வாழ்ந்தார்..
அதில் எங்கள் குடும்பத்திற்கு அரிசி வாங்க வேண்டிய காசும் அடக்கம்..
அப்படி ஒரு தகப்பனின் பிள்ளை என்ற உரிமையோடு இதைச் சொல்கிறேன்,
இந்தக் கட்சித் தலைமையை டெல்லியும் தீர்மானிக்க வேண்டாம்.. மன்னார்குடியும் தீர்மானிக்க வேண்டாம்..
மெரீனாவில் மண்மூடிக்கிடப்பவர்களைத் தெய்வமாகத்தொழுபவர்கள் தீர்மானியுங்கள்..

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response