மாவீரன் கிட்டு – திரைப்பட விமர்சனம்

ஜீவா என்ற படத்தில், கிரிக்கெட் விளையாட்டில் தலைவிரித்தாடும் பார்ப்பன ஆதிக்கத்தை அம்பலப்படுத்திய தோழர் சுசீந்திரன், மாவீரன் கிட்டுவில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் ஜாதிவெறியையும், பிற்படுத்தப்பட்டவர் – தாழ்த்தப்பட்டவர் ஒன்றாக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

பாடலாசிரியர் தோழர் யுகபாரதி அவர்களின் உரையாடலில் “அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்க்கவில்லை, அதிகாரங்களையே எதிர்க்கிறோம்” போன்ற கருத்தியல் பலமிக்க வசனங்களை, எளிமையாகக் கையாண்டுள்ள திறன் மாவீரன் கிட்டு படத்திற்கு மிகப்பெரும் பலமாக உள்ளன.

முதல் காட்சியிலேயே தோழர் பெரியார், தோழர் அம்பேத்கர், தோழர் மார்க்ஸ் ஆகியோரின் ஜாதி ஒழிப்பு தொடர்பான நூல்கள் காட்டப்படுகின்றன.

தமிழீழத்தில் தமிழர்களின் விடுதலைக்காகத் தன்னையே விதைத்த மாவீரன் கிட்டு (எ) கிருட்டிணக்குமாரைப் போல தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் உயிரையே தற்கொடையாக்கும் பாத்திரத்திற்கு கிட்டு என்று பெயரிட்டிருப்பது மிகவும் பொருத்தமாகவும், நெகிழ்வாகவும் உள்ளது.

ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரின் பிணத்தை பொதுத்தெருக்களில் கொண்டு செல்ல முடியாத அவலத்திற்கு எதிரான போர்க்களத்தில் தன்னையே தற்கொடையாக்கி, தானே பொதுத்தெருவில் பிணமாக வருகிறான் கிட்டு என்ற கிருட்டிணக்குமார். இது தான் மாவீரன் கிட்டு.

மயிலாடுதுறை அருகே உள்ள திருநாள்கொண்டசேரியில் அண்மையில் நடந்த தீண்டாமை வன்கொடுமை, தொடர்ச்சியாக நடந்துவரும் ஆணவப் படுகொலைகள் ஆகியவைகளே படத்தின் மய்யக்கருவாக உள்ளன.
ஜாதிக்கு எதிராகவும், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும் சமரசமின்றிப் போராடும் கருப்புச்சட்டை சின்ராசுவாக பார்த்திபன் வருகிறார். இதுவரை நாம் பார்த்த பார்த்திபனாக இல்லாமல் முற்றிலும் கருஞ்சட்டை சின்ராசுவாகவே வாழ்ந்திருக்கிறார்.

திரைப்படத்தின் களமாக உள்ள ஆயக்குடி பகுதியில் பிறந்து, அப்பகுதி மக்களோடு மக்களாகவும், ஜாதி, தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும் களம்பல கண்டு மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ஆயக்குடி வா.ப என்ற வா.பழனிச்சாமி போன்ற பல பெரியார் தொண்டர்கள் வாழ்ந்த காலத்தை மீண்டும் கண்முன்னே காட்டியுள்ளார் சுசீந்திரன்.
1987 ல் பழனியில் நடப்பது போன்ற கதை. கதைப்படி, ஒரு ட்ரெடில் அச்சகம் தான் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு அலுவலகம் போல இயங்குகிறது. அப்படிப்பட்ட அச்சகங்களை அதே 87 கால கட்டத்திலேயே நேரிலேயே பார்த்திருக்கிறோம்.

இப்போது அச்சகமாக இல்லாமல் இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட திண்டுக்கல் ஜார்ஜ் அச்சகம், பழனி தென்றல் அச்சகம், ஒட்டன்சத்திரம் குறிஞ்சி அச்சகம், மதுரை அன்பு அச்சகம் போன்றவை எண்ணற்ற ஜாதிஒழிப்புப்போராளிகளின் அலுவலகமாக இயங்கிய காலத்தை மாவீரன் கிட்டு நினைவூட்டுகிறது. இப்போது தி.க, த.பெ.தி.க, தி.வி.க, தி.மு.க, ம.தி.மு.க,பகுஜன் சமாஜ் கட்சி, தலித் போராளிகள் முன்னணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளின் பொறுப்பாளர்களாக உள்ள பல தோழர்களுக்கு இவை போன்ற அச்சகங்களே நாற்றங்கால்கள்.

அந்த அச்சகங்களோடு தம்மை இணைத்துக்கொண்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கருப்புச்சட்டைகள், பெரியாரிஸ்ட்டுகளின் ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்து ஏராளமான ஜாதிமறுப்புத் திருமணங்களைச் செய்து வைத்தனர். சுயஜாதி மறுப்பாளர்களாகத் திகழ்ந்தனர். அப்படிப்பட்ட சுயஜாதி மறுப்பாளர்களையும் கிட்டு அடையாளம் காட்டுகிறான்.
பழனியில் தாழ்த்தப்பட்டவர்களின் பிணத்தை பார்ப்பன அக்ரகாரங்கள் வழியாக எடுத்துச்செல்ல முடியாத நிலை 1990 வரைகூட இருந்தது. (இப்போதும் அந்த நிலை நீடிக்கிறதா எனத் தெரியவில்லை) அப்போது மிகவும் துணிச்சலாக, தனது மகனின் பிணத்தை அக்ரகாரம் வழியாகக் கொண்டு சென்ற கருப்புச்சட்டைகள் இன்னும் பழனியில் வாழ்கின்றனர்.
பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக்கல்லூரி, வரதமாநதி அணை, தேக்கந்தோட்டம், ஆயக்குடி காவல்நிலையம் என படப்பிடிப்பு நடந்துள்ள அனைத்துப் பகுதிகளும் 80 களின் இறுதியில் உண்மையாகவே திராவிடர் இயக்கங்களின் கோட்டையாகவே இருந்தன. இருந்தன என்றுதான் சொல்ல முடியும்.

1987 பீரியட் ஃபிலிம் என்பதால், அப்போது இருந்த பேண்ட், சட்டை, கண்ணாடி மாடல் – சி.டி. துணி பாவாடை, தாவணி, பாசி மாடல் – அப்போது வெளியான திரைப்படங்களின் சுவரொட்டி, சரோஜ் நாராயண்சுவாமியின் செய்திகள், எம்.ஜி.ஆர் மரணம், என மிகவும் கவனத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதை எந்த இயக்குநரும் செய்துவிட முடியும்.
ஆனால், 1987 காலத்தில் பழனி பகுதியில் இயங்கிய சமுதாய இயக்கங்கள், சமுதாயத்தின் நிலை, சமுதாயத்திற்காக உழைத்த போராளிகளின் வாழ்க்கைமுறை, அவர்கள் இயங்கும் முறை என அனைத்தையும் மிகச்சரியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கு மிகப்பெரும் திறன் வேண்டும். இப்படம் சுழலும் கதைக்களத்தில் அதே கால கட்டத்தில் அதே பகுதியில் இயங்கிய எங்களைப் போன்ற பலருக்கும் மறந்துவிட்ட பண்பாட்டைச் சரியாகப் படமாக்கிய தோழர் சுசீந்திரன் அவர்களை மனமாரப் பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம். – அதி அசுரன்

Leave a Response