கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 39 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய ஒன்றியம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத்தலைவர், பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இராகுல்காந்தி உள்ளிட்ட இந்திய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடும் துயர் குறித்து நடிகர் விஷால் கூறியிருப்பதாவது…
முழுக்க முழுக்க முட்டாள்தனம். நடிகர்/அரசியல்வாதி விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேள்விப்படுவது மனதை வேதனைப்படுத்துகிறது, முற்றிலும் சரியல்ல.
அப்பாவி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி செலுத்துகிறது, மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.
விஜயீன் தமிழக வெற்றிக் கழகம்கட்சியினரிடம் எனது மனமார்ந்த வேண்டுகோள், இறந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் அதுதான் கட்சியால் செய்யக்கூடிய குறைந்தபட்சமாக இருக்கும்.
எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு அரசியல் பேரணிகளிலும் இப்போதிலிருந்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் கட்சியே இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதும் இந்நிகழ்வு முழுக்க முழுக்க முட்டாள்தனமானது என்று காட்டமாக விமர்சித்திருப்பதும் கவனம் பெற்றிருக்கிறது.