செப்டம்பர் 27 அன்று கரூரில், நடிகர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக நாற்பது பேர் உயிரிழந்த நிகழ்வு நாட்டையே உலுக்கியிருக்கிறது.
இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அன்றிரவே அங்கு சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்தார்.
அடுத்தநாள் காலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூர் சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர்.
இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற அங்கு சென்றார்.
அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, இந்நிகழ்வு மாநில அரசின் தோல்வியைக் காட்டுகிறது என்று கடுமையாக விமர்சனமும் செய்தார்.
அங்கு அவர் சொன்ன கருத்துகள் மட்டுமல்ல கரூர் பயணமே கூட பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை.ஏனெனில் செய்தித் தொலைக்காட்சிகள் பலவற்றில் அவர் அங்கு சென்ற செய்தியைச் சொல்லக்கூட இல்லை.சிலர் பெயருக்கு அவர் வருகையைப் பதிவு செய்திருந்தனர்.
சின்னச் சின்ன கட்சித் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட சசிகலாவுக்குக் கொடுக்கப்படவில்லை.
இது ஏன்? அவருடைய ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுதொடர்பாக விசாரித்துப் பார்த்தால் அதிர்ச்சித் தகவல் ஒன்று கிடைக்கிறது.
அது என்ன?
எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பரப்புரையை முழுமையாக ஒளிபரப்புவதற்காக செய்தி தொலைக்காட்சிகளுக்கு பெரும் தொகை கொடுக்கப்படுகிறதாம்.அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு, எங்கள் பரப்புரையை முழுமையாக ஒளிபரப்பவேண்டும் அதே சமயம், அதிமுகவுக்கு உரிமைகோரும் சசிகலா குறித்தோ அவருடைய சுற்றுப்பயணங்கள் குறித்தோ எந்தச் செய்தியையும் வெளியிடக்கூடாது என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.
பெரும் தொகை கொடுப்பவர் சொல் கேட்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தொலைக்காட்சிகளும் சசிகலாவை இருட்டடிப்பு செய்கின்றன என்றும் அவர் தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் செல்கிறார், எல்லா முக்கிய நிகழ்வுகளுக்கும் அறிக்கைகள் கொடுக்கிறார் அவை எதுவும் பெரிதாகப் பதிவாவதில்லை என்றும் சொல்கிறார்கள்.
ஆச்சரியமாக இருந்தாலும் இதுதான் உண்மை என்று ஊடக வட்டாரங்கள் சொல்கின்றன.