சி.வி.சண்முகம் முதலமைச்சர் வேட்பாளர்? – பாஜக புதுமுடிவு

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மூத்த நிர்வாகிகளுடன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனையைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில்….

அதிமுக எம்பி சி.வி.சண்முகத்தை சந்தித்ததில் வியப்பு ஏதும் இல்லை. சென்னையிலிருந்து திருச்சி வரும் வழியில் அவர் வீட்டில் இருப்பதாக அறிந்து நேரில் சென்று சந்தித்தேன். இது சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்கலாம். முதலமைச்சர் வேட்பாளர், கூட்டணிகள் குறித்து உங்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும், டிசம்பர் மாதத்திற்குள் பதில் கிடைத்து விடும்.

கூட்டணியை வைத்து மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் கூட்டணி அவசியம். 1980 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2001 ஆம் ஆண்டு தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியையும் மீறி வெற்றிகள் அமைந்துள்ளன.

வரும் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மதுரையிலிருந்து யாத்திரை தொடங்குகிறது.அதில் பாஜக தேசியத் தலைவர் நட்டா கலந்து கொள்கிறார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்து வந்துள்ளார். நல்ல அனுபவம் வாய்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை. கூட்டணி மாறலாம் என கடம்பூர் ராஜு பேசவில்லை. மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றுதான் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் என்னுடன் பேசினார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், சி.வி.சண்முகத்தை நயினார் நாகேந்திரன் சந்தித்ததும் அது சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்கலாம் என்று அவர் கூறியிருப்பதையும் வைத்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு மாற்றாக சி.வி.சண்முகத்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க பாஜக திட்டமிட்டிருக்கிறதோ? என்கிற ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response