கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது சமூகவலைதளப் பக்கத்தில் காணொலியைப் பகிர்ந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது….
அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இது மாதிரியான வலி மிகுந்த நிகழ்வை நான் சந்தித்ததே இல்லை. மனது முழுவதும் வலி மட்டுமே இருக்கிறது.
இந்தச் சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது அவர்கள் என் மீது வைத்துள்ள பாசமும், அன்பும் . அதற்கு நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான், அவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துவிடக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருக்கும்.
அரசியல் காரணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு மக்கள் பாதுகாப்புக்கான இடங்களை கேட்பதில் கவனமாக இருப்போம். ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே. அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது எப்படி அந்த இடத்தை விட்டு வர முடியும்?. நான் திரும்ப அங்கு சென்றால், அது வேறு சில அசம்பாவிதங்கள், பதற்றங்களை ஏற்படுத்தக் கூடும். அதனால் தான் திரும்பிச் செல்லவில்லை.
இந்தத் தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த உயிரிழப்புகளுக்கு நான் என்ன ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை புரிந்து கொண்டு எங்களுக்காகப் பேசிய அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.
எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள்.
சிஎம் சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆஃபீஸில் இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாக இருக்கும். இன்னும் தைரியத்தோடு தொடரும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த காணொலியை அவர் வெளியிட்டதும்,ஏற்கெனவே அவர் அரசியல் கட்சித் தலைவர் போல் அல்லாமல் ஒரு திரைப்படக் கதாநாயகனாகத் தொடர்வதால்தான் இவ்வளவு துயரங்கள் நேர்ந்தன எனும்போது அதை இப்போதும் உணராமல் திமுக மீது பழி போடுவதும், என்னை என்ன வேணாலும் செய்யுங்க எங்காளுங்கள விட்டுடுங்க என்று திரைப்பட வசனம் பேசியிருப்பதும் அவருடைய அரசியல் அறியாமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என பலரும் விமர்சனம் செய்துவருகிறார்கள்.