கரூர் கொடுந்துயரில் ஆதாயம் தேடும் பாஜக – சான்றுடன்அம்பலப்படுத்தும் வன்னிஅரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

நடிகரும் தவெக தலைவருமான திரு.விஜய் அவர்களைக் காண வந்த இரசிகர்கள் 41 பேரின் கோரச்சாவு குறித்து விசாரிக்க நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட குழுவை நியமித்துள்ளது பாஜக தலைமை.

ஆனால், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில் கடந்த சனவரி 29 ஆம் தேதி நெரிசலில் சிக்கி 37 பேர் மட்டுமே உயிரிழந்ததாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசு அறிவித்த நிலையில், பிபிசி ஊடகம் நடத்திய ஆய்வில் உண்மையான பலி எண்ணிக்கை குறைந்தது 82ஆக இருக்கும் என்று கண்டறிந்தது.

இந்த சாவுகள் குறித்து விசாரிக்க பாஜக சார்பில் எந்த விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை.
மாறாக, பாஜக முதல்வர் ஆதித்யநாத் கடந்த மார்ச்சில் பேசும் போது, “8 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று இருந்ததால், அவர்களிடம் பதற்றத்தைத் தவிர்க்க நெரிசல் தொடர்பான செய்திகளையும், தரவுகளையும் பெரிதாக்காமல் பார்த்துக் கொண்டேன்”என்றார்.

ஆனால், தமிழ்நாட்டில் நடந்த இந்த 41 பேரின் சாவை வைத்து பாஜக தலைமை உள்நோக்கத்தோடு அரசியல் செய்வது வெளிப்படையாக தெரிகிறது.

உபி கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் அப்பாவி மக்கள் மரணித்த கோரச்சம்பவம் குறித்து விசாரணைக் குழு அமைக்காத பாஜக, தமிழ்நாட்டுக்கு மட்டும் அமைத்தது ஏன்? பாஜக ஆளாத மாநில அரசுகளை
பிளாக்மெயில் செய்யவா?

இதே போல் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு, தஞ்சை – மைக்கேல்பட்டி லாவண்யா தற்கொலை செய்த வழக்கை முன் வைத்து, கட்டாய மதமாற்றம் செய்ததாக கத்தோலிக்க கிறித்தவ பள்ளி மீது அபாண்டமான குற்றம் சுமத்தியது தமிழக பாஜக. இதை விசாரிக்க அன்றைக்கு பாஜகவிலிருந்த நடிகை விஜயசாந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அனுப்பினார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.

விசாரணை செய்த விஜயசாந்தி உள்ளிட்ட குழு ஊடகவியலாளர்களை சந்தித்து,
“கட்டாய மதமாற்றத்தால் தான் லாவண்யா மரணித்தார்” என பாஜக தலைமை எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டையே ஒப்புவித்தனர். ஆனால், இவ்வழக்கை விசாரித்த சிபிஐ ‘கட்டாய மதமாற்றத்தால் லாவண்யா இறக்கவில்லை’ என்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தது. மதுரை உயர்நீதிமன்றமும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்றும் “இதை வைத்து மலிவான அரசியல் செய்வது அயோக்கியத்தனம்” என்றும் தீர்ப்பளித்தது.

இத்தனைக்குப் பிறகும் தமிழக பாஜக தாங்கள் செய்த இழிவான அரசியல் குறித்து சின்ன வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.
பாஜக ஆளாத மாநிலங்களில் பதற்றத்தை உருவாக்கவே இப்படியான விசாரணை குழுக்கள் அமைக்கப்படுகிறது தவிர,வேறு நோக்கம் இல்லை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response