கரூர் கொடுந்துயர் – காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை

கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பரப்புரைக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) கூறப்பட்டுள்ளதாவது….

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்காக மத்திய மண்டல ஐ.ஜி., கரூர் எஸ்.பி. மேற்பார்வையில் 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விஜய் நண்பகல் 12 மணிக்கு கரூர் வர இருப்பதாகத் தகவல் பரவியதால், காலை 10 மணியில் இருந்தே வேலுசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என கரூர்மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் விண்ணப்பத்தில் தெரிவித்த நிலையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர்.

மாலையில் விஜய் அனுமதி: இல்லாமல் ‘ரோடு ஷோ’ நடத்தி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தியதுடன், காலதாமதமும் செய்தார். முனியப்பன் கோயில் சந்திப்பில் தவறான திசையில் (‘ராங் ரூட்’) அதாவது சாலையின் வலதுபுறம் விஜய் உள்ளிட்டோரின் வாகனங்கள் சென்றன. இரவு 7 மணிக்கு வேலுசாமிபுரம் சந்திப்பில் தொண்டர்களின் கூட்டத்துக்கு நடுவே வாகனத்தை நிறுத்தி, வேண்டுமென்றே காலதாமதம் செய்து, போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதச் செய்ததால், அசாதாரண சூழல் ஏற்பட்டது.

இதனால், மக்களுக்கு மூச்சுத் திணறல், கொடுங்காயம், உயிர்ச் சேதம் ஏற்படும் என்று மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பலமுறை எச்சரித்தும், கேட்கவில்லை. அதிக கூட்டத்தை கூட்டி, அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய், கரூருக்கு வருவதை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதனால், அங்கு பல மணி நேரம் காத்திருந்த மக்கள் வெயிலிலும், தாகத்திலும் சோர்வடைந்தனர்.

சாலையோர தகரக் கொட்டகைகள், மரங்களில் தொண்டர்கள் ஏறி உட்கார்ந்ததால், சில இடங்களில் தகரக் கொட்டகை உடைந்தும், மரக்கிளைகள் முறிந்தும் விழுந்தன. இதனால், அதில் உட்கார்ந்திருந்தவர்கள், கீழே நின்றிருந்த மக்கள் மீது விழுந்தனர். இதனால், பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். நெரிசலில் மிதிபட்டு, அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் நகரகாவல் நிலையத்தில் (குற்றஎண். 855/25) பிஎன்எஸ் பிரிவு 105,110, 125(b), 223 மற்றும் தமிழக அரசின் பொதுச் சொத்து சேதப்படுத்துதல் சட்டப் பிரிவு 3 ஆகியபிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response