
காவிரி நீர்ப் பங்கீடு சிக்கலில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது’ என உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த செப்.30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அக்டோபர் 4-ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல்ரோஹத்கி இன்று (2.10.16 திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அப்போது அவர் வாதிடும்போது, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது” என்றார்.
மத்திய அரசின் இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
“காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் வரும் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்தக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களிலும் காவிரி நீர்ப்பாசனப் பகுதியை முழுமையாக ஆராய்ந்து வரும் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் ஏற்கெனவே மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதிகளை அறிவித்துவிட்ட நிலையில் கர்நாடகா இப்போதைக்கு பிரதிநிதியை அறிவிக்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதற்காக திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல கட்சித்தலைவர்கள் மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தலைவர் சு.ஆ.பொன்னுசாமி பேசியிருக்கிறார். அவர் எழுதியுள்ள பதிவில்,
“காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்த மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஓரணியில் திரள வேண்டும்.
காவேரி விவாகரத்தில் இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி என ஈகோ பார்த்துக் கொண்டு தமிழகத்தின் ஒற்றுமையை விட்டுக் கொடுக்கவோ, தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படவோ காரணமாக இருக்கக்கூடாது.
தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுமானால், காவேரி விவாகரத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு அமுல்படுத்த தவறுமானால் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்களும் தங்களின் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்து பாரதப் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகளை அவர் பிரதிபலித்திருப்பதாகப் பலரும் சொல்கின்றனர்.



We also have the same rights with kauveri as Indians…. Else all MPs resign thr gud job…
All Indians r brothers n sisters. Not differentiated as Tamil Nadu r Karnataka…. Be honest to urslf.. ?