
மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.இவ்வாண்டு முதல் ஆறாம்வகுப்பிலிருந்து இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.ஆறாம் வகுப்பில் புதிய மொழியை கற்கத் தொடங்கும்போது,கற்றலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,திடீரென 3 ஆவது மொழியைப் புகுத்துவது என்பது, மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.ஏற்கனவே ஆங்கிலம் படித்து வரக்கூடிய மாணவர்கள் திடீரென்று இந்திமொழிக்கு மாறுவது என்பது இயலாத காரியம்.மனதளவில் அது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள்,தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்துவதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. மும்மொழியை திடீரென அமல்படுத்தும்போது ஏற்படும் விளைவுகளைத்தான் உச்சநீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.மூன்று மொழி என்ற கொள்கையை அமல்படுத்துவதை அவசரகதியில் செய்யாமல் நிதானத்துடன், உரிய கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா,போதிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இருக்கின்றனரா? என்ற அனைத்து அம்சங்களையும் பார்த்துச் செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என்றனர்.
தற்போது ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதிய மும்மொழி விதிமுறையிலிருந்து நடப்பு ஆண்டு ஒருமுறை மட்டும் விதிவிலக்கு கொடுத்து தளர்வு அளிப்பது முடியுமா? என்பது குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தற்போதைய ஆறாம்வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி குறித்து முடிவெடுக்கவும்,அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவும் கூடுதலாக ஒருகல்வி ஆண்டு வழங்கமுடியுமா? மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த போதுமான மனிதவளம் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு உருவாக்கப்படும்?
மூன்றாவது மொழியை ஆறாம் வகுப்பிலிருந்தே அறிமுகப்படுத்த வேண்டுமா அல்லது 3 ஆம் வகுப்பு,4 ஆம் வகுப்பிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டுமா? ஆகியவை குறித்த அனைத்தையும் ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை அடுத்த 10 நாட்களில் சிபிஎஸ்இ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மோடி அரசின் கட்டாய இந்தித் திணிப்பை உச்சநீதிமன்றமும் ஆதரித்துப் பேசியிருப்பது இந்தி பேசாத மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.


