நிதிஷ்குமார் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை – பாஜக கூட்டணி பின்னடைவு

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணியும் தற்போது ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான தேச கூட்டணியும் களத்தில் நிற்கின்றன.

மகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஆர்ஜேடி 143 தொகுதிகளிலும், காங்கிரசு 60 தொகுதிகளிலும், சிபிஐ (எம்எல்) 20 தொகுதிகளிலும், விஐபி கட்சி 15 தொகுதிகளிலும், சிபிஐ 9 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும், ஐஐபி கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

தேசிய சனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்தாலும், நிதிஷ் குமாரின் கட்சி, பாஜக மீது அதிருப்தியில் உள்ளது. எப்போதும் ஐக்கிய ஜனதா தளம்தான் அதிக தொகுதிகளில் போட்டியிடும். ஆனால் இம்முறை ஜேடியு – பாஜக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியது ஜேடியு கட்சியினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதுபோல ‘தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே முதலமைச்சர் யார் என முடிவு செய்வோம்’ என அமித் ஷா அறிவித்துள்ளது நிதிஷை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனால் ஜேடியு – பாஜக தொண்டர்கள் களத்தில் முழு மூச்சோடு வேலை செய்வது தடைபட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். அதேபோல சிராக் பாஸ்வானின் கட்சியினரும், நிதிஷ் குமார் கட்சிக்கு முழு ஈடுபாட்டோடு வேலை செய்வார்களா? என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

நிதிஷ் குமாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்காதது, தேசிய சனநாயகக் கூட்டணியில் பெரும் சலசலப்பை உருவாக்கியதால் மகா கூட்டணி மகிழ்ச்சியில் உள்ளது.மேலும் பிரசாந்த் கிஷோரின் கட்சி, பாஜக கூட்டணியின் வாக்கு வங்கிக்கு சேதாரத்தை உருவாக்கும் என்பதால் மகா கூட்டணி மகிழ்ச்சியில் இருக்கிறது.

2020 தேர்தலில் மிக நெருக்கத்தில் வெற்றியைத் தவறவிட்ட மகா கூட்டணி இம்முறை நிச்சயம் பெரிய வெற்றி பெறும் என அக்கூட்டணியினர் தெம்போடு தெரிவிக்கிறார்கள்.

2020 தேர்தலில்,நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணி 125 தொகுதிகளை வென்று ஆட்சியமைத்தது.தேஜஸ்வி தலைமையிலான மகா கூட்டணியில், ஆர்ஜேடி 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இல் வென்று தனிப்பெரும் கட்சியானது. காங்கிரசு 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இல் வென்றது. இடதுசாரிகள் 16 இடங்களில் வென்றன. மகா கூட்டணி மொத்தம் 110 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response