விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி – எடப்பாடி அணி அழைப்பு

முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், இந்நாள் எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான அதிமுகவைச் சேர்ந்த ஆர்பி.உதயகுமார் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது….

முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் ரோடு ஷோ நடத்துகிறார். தற்போது வடகிழக்குப் பருவமழையில் சாலைகள் எல்லாம் குண்டும், குழியுமாகக் காட்சி அளிக்கின்றன. மக்கள் தத்தளிக்கிறார்கள். முதலமைச்சர் இப்போது ரோடு ஷோ நடத்தி நிலைமையைக் கண்டறிய முன்வருவாரா?

ஆளும்கட்சி என்கிறார்கள். உட்கட்சிப் பூசலில் மதுரை மாநகராட்சியில் ஒரு மேயரைக் கூட அவர்களால் நியமிக்க முடியவில்லை. 75 ஆண்டுகள் கொண்ட மாபெரும் கட்சி திமுக. ஆனால் இன்றைக்கு 4 மாமன்ற உறுப்பினர் கொண்ட கம்யூனிஸ்ட்டை சேர்ந்த துணைமேயருக்கு பொறுப்பு மேயரை விட்டுக் கொடுத்துள்ளது. அவங்க கட்சிக்காரங்களே வெறுப்படைந்துவிட்டார்கள்.

டிடிவி தினகரன் கருத்தை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். எடப்பாடியார் மைதானத்தில் ஓடி வெற்றிக்கான கோப்பையை பெரும் நிலையில் உள்ளார், ஆனால் மைதானத்தில் வேடிக்கை பார்ப்பவர் தான் டிடிவி தினகரன் அவரது பேச்சு வெட்டிப்பேச்சு ஆகும்.

இன்றைக்கு திமுகவை வீழ்த்தும் சக்தி அதிமுகவுக்கும்,எடப்பாடி பழனிச்சாமிக்கும்தான் உள்ளது. அனைவரும் எங்கள் பின்னால் அணி திரண்டு வரவேண்டும். நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் அவர் ஜெயிக்க முடியும். இல்லையென்றால் ஆந்திராவில் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவருக்கு ஏற்படும். ஆனால் பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து இன்றைக்கு ஆந்திராவில் துணை முதலமைச்சராக உள்ளார். விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும், அவரது தொண்டர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் தமிழ்நாட்டு மக்களை மட்டுமில்லாது தவெக-வையும் அந்த ஆண்டவனால் கூடக் காப்பாற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி அணியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இவர், ஆந்திராவில் பவன் கல்யாண் எடுத்த முடிவை இங்கு விஜய் எடுக்கவேண்டும் என்று கூறியிருப்பதால்,இவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி தரத்தயார் என்று பொருள்படுகிறது.

இவருடைய வெளிப்படையான இந்த அழைப்பு அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Response