
நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….
உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பேச அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
நான் முருகனுக்கு விழா நடத்தும் போது விமர்சனம் செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ், பாஜக ஒவ்வொரு பகுதிகளிலும் கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்கள். கேரளாவில் ஐயப்பனை தொட்டார்கள்,வடமாநிலங்களில் இராமரை தொட்டார்கள். இராமர் கோவில் கட்டி விட்ட பிறகு அது முடிந்து விட்டது. ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை தொட்டார்கள். தற்பொழுது தமிழ்நாட்டில் வந்து முருகனை தொட்டுப் பார்க்கிறார்கள்.
பல ஆண்டுகளாக தமிழர்களின் கடவுளாக இருக்கக்கூடிய முருகன், இதற்கு முன்பு அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. இவ்வளவு காலம் பாஜக எதுவும் செய்யவில்லை. நாங்கள் முருகனைத் தூக்கிச் சென்றவுடன் முருகனையும் நாம் பேசலாம் என பாஜக பேசுகிறார்கள். நான் என் இறையைப் போற்றுகிறேன். நீங்களும் அதைப்போற்றினால் மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் வழிபட்ட கடவுள்களை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
அவர்கள் செய்வது மத அரசியல்தானே தவிர, மக்கள் அரசியல் அல்ல. இதற்கெல்லாம் ஏமாறும் கூட்டம் அல்ல தமிழர்கள். இத்தகைய மத அரசியலை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
தேர்தலைப் பொறுத்தவரை, 2026 மட்டுமல்ல, 2029, 2031 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும்.
இவ்வாறு சீமான் கூறினார்.


